பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 30 avril 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். பரந்து, விரிந்த இந்த உலகு மிக அழகானது. கண்ணுக்கெட்டிய வரை மெல்லிய நீலத் துகில் போர்த்தியது போன்ற வானம், அது கரு மேகத் திரையிட்டிருந்தாலும் அதிலும் ஓர் கவர்ச்சி,  கூச வைக்கும் தன் கதிர்களால் புத்துணர்ச்சியூட்டும் கதிரவன், மேனி தழுவிச் செல்லும் இளங்காற்று, அசைந்தாடி மனதை ஈர்க்கும் செடி,கொடிகள், தன் பிரம்மாண்டத்தால் மலைக்க வைக்கும் அகண்டு கிளை பரப்பிய மரங்கள், ஆங்காங்கே தங்கள் நிறத்தாலும், மணத்தாலும் மயங்கச் செய்யும் மலர்கள், ஓசையின்றி நழுவிச்  செல்லும் நீரோடைகள், சலசலத்து ஓடி, பேரோசையுடன் வீழ்ந்து புரளும் அருவிகள், அணைக்க வருவது போல் அலைக்கரங்களை நீட்டும் ஆரவாரக் கடலலைகள் என எல்லாமே மனிதனுக்கு பிரமிப்பையும், மனதுக்கு இதத்தையும், மகிழ்ச்சியையும் தரவல்லவை!
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)

இந்த அழகான உலகில் தன் ரசிக்கும் மனநிலையை மனிதனும் தன் பங்குக்கு ஓவியமாக, சிற்பமாக, பாடலாக, நடனமாக வெளியிட்டு மெருகேற்றினான்.  

விஞ்ஞானம் வளர்ந்து, அவன் அறிவு கட்டடக் கலையாகவும், புதுக் கண்டுபிடிப்புகளாகவும் பரிணாமம் கொள்ள ஆரம்பித்து, கற்பனைகள் புதுக் கோணங்களில்  செயற்கை  உருக்கொள்ள ஆரம்பித்தப் பின் இயற்கையோடியைந்த வாழ்வும் போலியாக மாற ஆரம்பித்தது.

பழைய அமைதியையும், புத்துணர்வையும் பெற,  தன் அன்றாட இயந்திரத்தனமான சூழலிலிருந்து விடுபட, அவ்வப்போது இயற்கையை நாடிச் செல்ல ஆரம்பித்தான். இதுவே நாளடைவில் ஓர் அத்தியாவசியமான, செய்தே ஆக வேண்டியக் காரியமாக உருக்கொள்ள ஆரம்பித்து விட்டது.

பணம் படைத்தவர் ஏதேனும் செய்து விட்டு போகட்டும். ஆனால் இந்தச் 'சுற்றுலா' என்ற வார்த்தை அவர்களால் சாமானியரிடத்தில் விதைக்கப்படுவதையும், அதை செய்யாதவர் அறிவிலிகள் போன்று தோற்றமளிக்கப்படுவதையும்தான் பொறுக்க இயலவில்லை.

நேரில் ஓர் நீர்வீழ்ச்சியைக் காண்பது களிப்பைத் தரும் அனுபவம்தான்! யாரும் மறுக்கவில்லை. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு? ஒரு நாள் முழுதும் அங்கே நின்றாலும், இறங்கத்தானே வேண்டும்! கண்ணோடு அக்காட்சி வந்துவிடப் போவதில்லை. அவ்வுணர்வை அனுபவித்த உள்ளம் மட்டுமே அதை மீண்டும், மீண்டும் நினைக்க வைக்கிறது. சில காலம் கடந்தபின் தான் செய்த பெருமைக்குரிய செயலாக அது மனதில் தங்குகிறதே ஒழிய அதே உணர்வைக் கூட அளிப்பதில்லை.

அவ்வனுபவத்தை அடைய முடியாதவர்கள் அதற்காக வெட்குவதோ, வேதனைப்படுவதோ  அவசியமா என்ன! கையிலுள்ள பணம் முழுவதையும் செலவழித்தோ அன்றி கடன் வாங்கியோ அங்கு செல்ல முயல்வது உகந்ததா என்ன!

தன்னைச் சுற்றியுள்ள அழகை ரசிக்கும் மனவளத்தைப் பெருக்கிக் கொண்டால் போதும். அழகு தொட்டியில் மலரும் பூவிலும், இளந்தளிரிலும் கூடக் கொட்டிக் கிடக்கிறது. குழந்தையின் சிரிப்பிலும், அழுகையிலும் கூட நிறைவும் புத்துணர்வும் கிடைக்கும்.

அனுபவத்தைப் பெருக்கும்; அறிவை வளர்க்கும் என்றெல்லாம் சொல்வார்கள். மரணம் பற்றி எழுத யாரும் மரணிப்பதில்லை. ஓர் வட்டத்துக்குள் வாழ்ந்தால் அறிவு வளராது என்பதற்குச் சான்றுகள் இல்லை.

தொழிலதிபர் ஜிடி நாயுடு, 'இந்தியாவுக்குக் கலை, சினிமா போன்றவைகளை விட பொருளாதார மேம்பாடே அவசியம்' என்பாராம்!' அவருக்கு அழகுணர்வு இல்லை என்றா அர்த்தம்? அவரே பாரிஸ் லூவ்ரே கலைக்கூடத்தின் சிலைகளை, 'கல்லில் வலைபோல் எப்படி செதுக்கி உள்ளனர்!' என்று வியந்திருக்கிராராம். மக்களுக்குச்  சரியான அறிவு, முதிர்ச்சி, உழைப்பு பழகி பக்குவப்பட்டப் பின், மற்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும் என்பதே அவர் அறிவுறுத்த விரும்பியது.

ஓயாத வேலைக்கு மாற்று மருந்தே இது என வாதிப்பார்கள். ஒரு வேலைக்கு மாறான இன்னொரு வேலை கூட மாற்று மருந்துதான். எனவே சுற்றுலா என்பதை ஓர் 'அவசியம்' எனக் கொள்ளாது, முடிந்தால் செய்யக்கூடியதாகக் கொள்வது, பண விரயத்தினின்றும், மன உளைச்சலிலிருந்தும் காக்கும்வழியாகும்!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire