பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 28 février 2015

காணாமல் பூப்பூக்கும்

இரண்டு  மணி நேரம் பயணம் செய்யக்கூடிய  இடத்திற்கு சிறிய குழுவாக வாகனத்தில் சென்றிருந்தோம். பலவிதமாக பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் நேரம் நகர்ந்தது. இடையில் விடுகதை சொல்ல ஆரம்பித்தார் நண்பர் ஒருவர். அதில் போடப்பட்ட இரண்டு புதிர்கள்தான் என்னுடைய இந்த கட்டுரையின் பின்புலம். அந்த விடுகதைகள் :
 காணாமல் பூப்பூக்கும் கண்டு காய்காய்க்கும் . அது என்ன?
கண்டு பூப்பூக்கும்; காணாமல் காய் காய்க்கும். அது என்ன?
விடையை ஊகித்துவிட்டீர்களா?

 
அவை அத்திமரம், வேர்க்கடலை.
காணாமல் பூப்பூக்கும் என்ற சொல் என்னை மிகவும் கவர்ந்தது. 
அத்திமரம் பூக்காத மரமா என்ற ஐயம் எழலாம். ஒரு மரம் பூக்காமல் காய், கனி எப்படி கிடைக்கும்?அத்தி காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே  தெரியாது.
இதன் பூக்கள் மிகவும் சிறியவை.இவை எண்ணிறைந்தவையாகவும் மஞ்சரிக்குடத்தின்(calyx) உட்புறத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அதனால் வெளியே பார்வைக்குத் தெரியாது. அதனால்தான்
அத்தி பூவை யார் அறிவார்?
அத்திபூவைக் கண்டவர் உண்டோ? என்ற பழமொழிகள் வழக்கில் உள்ளன.

அத்தி மரத்தில் பூ, பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். எனவே காணக் கிடைக்காதது கிடைத்தால்... அதை 'அத்தி பூத்தாற்போல’ என்பார்கள்.
அத்தி பூவைப் பற்றிச்  சில  செய்திகளைப் புத்தகங்கள், இணையம்,வலைப்பூக்களில் இருந்து சேகரித்து இங்குத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
அத்திப் பூ என்பது நூற்றுக்கணக்கான பூக்கள் அடங்கிய பூங்கொத்து, இதழ்கள் மூடப்பட்டு பிஞ்சு போல இருக்கும்.அத்திப்பூக்களில் ஆண் பூ, பெண் பூ, மலட்டுப்பூ(Gall flower), அலிப்பூ(Neutral sterile or Mule flower) என நால்வகை உண்டு. மேற்பகுதியில் சின்ன துவாரம் உண்டு.பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுக்  காயாகிப் பின் கனியாகிவிடுகின்றன .மூடிய இந்தப் பூவில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற Agaonidae என்ற குளவி அல்லது பூச்சி இனம் துணை செய்கிறது.

குளவிகள் இல்லை என்றால் அத்தி மரம் இல்லை; அத்தி மரம் இல்லை என்றால் குளவிகள் இல்லை என்பார்கள். இரண்டுக்கும் இடையேயுள்ள உறவு சுவாரசியமான  தொடர் நிகழ்வு. எப்படி நடக்கிறது என்று பார்ப்போமா!!
 
இனச் சேர்க்கைக்குப் பிறகு ஆண் குளவிகள் இறந்துவிடும். மகரந்தத்தைச் சுமந்து வரும் கருவுற்ற பெண் குளவி, பிஞ்சின் (மலரின்) மேல்பக்கத்தில் உள்ள  சின்ன துவாரத்தின் வழியாக உள்ளே நுழைகிறது. இந்தத் துவாரத்தின் வழியாக நுழைவதற்குள் பெண் குளவி  தன்னுடைய இறக்கையையும் அண்டெனாவையும் இழந்துவிடும்.மலரின் உள்ளே  அங்கும் இங்கும் திரிந்து வந்து முட்டைகளை இட்டுவிடுவதுடன்  தான் பிறந்த பூவிலிருந்து கொண்டு வந்த மகரங்கங்களால் இந்தப் பூவில் மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகுத்துப் பின் இறந்துவிடும். முட்டைகளிலிருந்து புழுக்கள் தோன்றி  அத்தி விதையை உண்டு வளர்கின்றன. புழுக்களிலிருந்து வெளிவரும் ஆண் குளவிகள் பெண் குளவிகளை  கருவுறச்செய்து பின் தங்கள் தாயைப்போலவே   மரித்து விடுகின்றன.இந்த குளவிகளுக்குப் பிறக்கும் வீடும் சமாதியும் இந்த அத்திப் பழம் தான். கருவுற்ற பெண் குளவிகள் மகரந்தங்களைத் தங்களுடன் சுமந்துகொண்டு அந்தச் சிறிய துவாரத்தின் வழியாக வெளியேறி மற்றொரு மலரை நாடி, தேடி ஓடும். பெண் பூவிலிருந்து சதைப் பற்றுள்ள  சிறு கனி உருவாகும். அதனையே விதை என்பர்.அத்தி மரத்துக்கும் குளவிகளுக்கும் இடையே உள்ள இந்த உறவுப் பயணம் முடிவில்லாத சுழற்சியாகத்  தொடர்கிறது.

அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை அல்லது புழு; அத்திக் காயைப் பிட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல் என்ற  சொலவடையின்  காரணம் இப்போது புரிந்திருக்குமே!

பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரங்களைக் (அத்தி, ஆல், பலா, அரசு )கோளி என்பர் பழந்தமிழர்.இதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் பல உண்டு.
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல (பெரும்பாணாற்றுப்படை )

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து  (மலைபடுகடாம்)

முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து  (புறநானூறு)



அத்தியைச் சங்கப் பாடல்களில் அதவம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.அத்தி கல்ப மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். அராபிய ,ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே   விரும்பப்பட்ட கனியாக அத்தி இருந்து வந்திருக்கிறது.உலகத்தின் முதல் மரம் அத்தி என்று சொல்வார்கள். பைபிள், குரான் போன்ற மறை நூல்கள் அத்தி பற்றிப் பேசுகின்றன.இம்மரத்தின் பல வகைகளை உலகின் பல பகுதிகளிலும் காணலாம்.
பிறர் விரும்பும் வண்ணம் கவர்ச்சியான நிறம்,மணம் உடைய மலர்களைக் தன்னகத்தில் கொள்ளாவிட்டாலும் தன் பணியை எந்த ஆரவாரமும் இன்றிச் செவ்வனே முடிக்கும் பூவாதே காய்க்கும் மரங்களை , பிறர் சொல்லாமல் தாமே பணி ஆற்றும் தன்னடக்கம் உள்ளவருக்கு ஒப்பிட்டுச் சொல்வார் ஔவையார் நல்வழியில்(35)

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - என்று.
 
 இவருடைய நுண்ணறிவு போற்றுதற்குரியது. இயற்கையும் கற்றோரும் தரும் பாடங்கள் வழி நிற்போம்.
திருமதி.லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire