பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 novembre 2014

பரி நகரின் பாதாளச் சாய்க்கடைகள்!



நாகரிக முன்னேற்றத்தைக் குறிப்பிட எத்தனையோ அறிகுறிகள்! அவற்றுள் ஒன்று  'சாய்க்கடை வடிவமைப்புஎன்றால் நம்புவீர்களா? உண்மை இது! சிந்து சமவெளியில் அகழ்வாய்வு  மேற்கொண்ட ஆய்வாளர்கள் அசந்து போனார்கள்: ஆழப் புதைந்து கிடந்த இடிபாடுகளுக்கு இடையில் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நகரத்தின் சிதிலங்கள் சிதறிக் கிடந்தனவாம். மேலும் அந்த நகரின் சாக்கடைகள், பாதாளச் சாய்க்கடைகள் அவ்வளவு  சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தனவாம்! ஆகவே சிறப்பான நாகரிகத்துக்கு  உள்ள அறிகுறிகளில் ஒன்றாகச் சிறப்பான சாய்க்கடை வடிவமைப்பும் இடம் பெற்றது.

இந்த அடிப்படையில் பார்த்தால் இக்கால நாகரிகத்துக்கு எடுத்துகாட்டாகப்  பரி நகரம் விளங்குகிறது. ஆம் பரி நகரத்தின் பாதாளச் சாய்க்கடைச் சிறப்புகளைக்  கேட்டால் அப்படியே சொக்கிப் போவீர்கள். வருகிறீகளா, ஒரு சுற்று அடித்து வருவோம்.
பரி பாதாளச் சாய்க்கடைகளைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமா? கவலையே வேண்டாம்! குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு. அதன் நுழை வாயில் அல்மா பாலத்துக்கு அருகில் (Pont d'Alma) உள்ளது. ஆண்டுக்கு 95 000  பேர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள்!

பரி நகரின் பாதாளச் சாய்க்கடை அமைப்புகள் இன்று நேற்று உருவானவை அல்ல! 1370 ஆம் ஆண்டு மொன்மார்த்ர் தெருவின்  (Rue Montmartre) கீழ் அமைக்கப்பட்ட பாதாளச் சாய்க்கடைத்  திட்டம் பலவேறு பிரஞ்சு அரசுகளால் தொடரப்பட்டு நகர் முழுவதும் பரவலாக்கப்பட்டது.
இடைக்காலம் வரை பரி நகரின் குடி நீர்த் தேவையைச செய்ன் நதி நீர் பார்த்துக்கொண்டது.பயன்படுத்தப்பட்டு மாசடைந்த நீரை விளை  நிலங்களிலோ தளம் பாவப் படாத தெருக்களிலோ கொட்டினார்கள்.அதன் பின் அந்த நீர் மறுபடி செய்ன்  நதிக்கே திருப்பிவிடப்பட்டது.ஏறக்குறைய 1200 ஆண்டுகளில் பிலிப் ஒகுஸ்ட் (Philippe Auguste) அரசர் பரி தெருக்களில் கற்களைப் பதித்துத் தளம் பாவினார். அவற்றின் அடியில் மாசடைந்த நீர் பாய்ந்தோடப் பாதாளச் சாய்க்கடை அமைக்கப்பட்டது.1370 -இல் 'Hugues Aubriot' என்பவர் மொன்மர்த்ர்  தெருவின் கீழ் நிலவறை  கல்லால் கட்டினார் ; இதில் சேகரிக்கப்பட்ட அழுக்கு நீர்  'Menilmontant' ஓடைக்குக்கொண்டுபோகப்பட்டது. 14 -ஆம் லூயி மன்னர் காலத்தில் செய்ன்  நதி இடக் கரைப் பக்கம் சாய்க்கடை வட்டத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது.1855 -இல் 3 -ஆம் நெப்போலியன் , பரி நகரின் சுகாதாரம், போக்குவரத்துகளையும்  மேம்படுத்த  முனைந்தார். விளைவாகப் புத்தம் புதிய பெருஞ்சாலைகள், நீர்வழிப் பாதைகள்,
சாய்க் கடைகள் முளைத்தன.அவரிடம் பணியாற்றிய  ஒஸ்மான் பிரபு (Baron Haussmann), பொறிஞர் யுஜின் பெல்கிரான்  (Eugène Belgrand) இப்போதுள்ள பரி சாய்க்க்கடைகள், நீர் வழங்கு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள். குடி நீர் , குடி நீர் அல்லாத பொதுப் பயனாகும் நீர் என இருவகை நீர் வழங்கவும் 600 மீட்டர்  நீளச் சாய்க்கடைகள் அமைக்கவும் அவர்கள் பெரிதும் உதவினர்.

1914 முதல் 1977 வரை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட சாய்க்கடைகள்  உருவாக்கப்பட்டன. 1935 முதல் எவ்லின் பகுதியில் உள்ள Achères அழுக்கு நீர் தூய்மை படுத்தும் நிலையம் உருவாக்கப்பட்டது.

பரி நகரில் இருப்பது போன்ற சிறப்பான சாய்க்கடை அமைப்பு  வேறு எந்த நகரத்திலும் இல்லை! 2100 கிலோமீட்டர் நீளமான நிலவறைகள்  ஊடாக (tunnels), சாய்க்கடைகள்  அமைந்துள்ளன ; இவற்றில் ஓடுவது வெறும் அழுக்கு நீர் என்று கருத வேண்டா! ஆம்;, இவற்றின் ஊடாக நன்னீர்க் குழாய்கள், குடி நீர் அல்லாத நீர்க் குழாய்கள், தொலை தொடர்புக்கு உதவும் கம்பிகள், போக்குவரத்துக்கு உதவும்  விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கம்பிகள்...எனப் பலவற்றையும்  இவை தம்முள் அடக்கி உள்ளன! ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படும் அழுக்கு நீரின் அளவு என்ன தெரியுமா? 1.2 மில்லியன்  க்யுபிக் மீட்டர் !ஒவ்வோர் ஆண்டும் 15 000 க்யுபிக்  மீட்டர் அழுக்குகள் அகற்றப்படுகின்றன! மலைப்பாக  இல்லையா !

பரி நகரச் சாய்க்கடைகளுக்கு என்றே தனி காட்சியகம் உண்டு தெரியுமோ!1800 முதல் கொண்டே சாய்க்கடைச் சுற்றுலா புகழ் பெறத் தொடங்கிவிட்டது. கீழே  சாய்க்கடைகள் ஓட கொஞ்சம் மேலே நடை பாதைகள்  அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுற்றுலா போகலாம்.

இச்சுற்றுலா ஒரு மணி நேரம் நீடிக்கும். வழி நெடுக சாய்க்கடைகள்  வரலாறு விவரிக்கப்படும். அக்கால இக்கால எந்திரங்கள், கருவிகள்...முதலியவற்றைக் காணலாம்.

சுற்றுலா நேரம் : வியாழன், வெள்ளி விடுமுறை

சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை.

கட்டணம்பெரியவர்கள் : 4.40 யூரோக்கள்

சிறப்புக்  கட்டணம் : 3,60 யூரோக்கள் (10 பேர் கொண்ட குழு ; மாணவர்கள், 6 முதல் 16 வயது உள்ளவர்கள், சீருடையில் வரும் படை வீரர்கள், famille nombreus, Paris-famille , améthyste et émeraude... cartes வைத்திருப்பவர்கள்).


குறும்படம் காண இங்கே அழுத்துக : Visitez les égouts de Paris
தகவல் :எழிலன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire