பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 août 2014

தேசபக்தி பாடல்கள்



சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில்,ஆங்கிலேயரை எதிர்த்து பல முனை போராட்டங்கள் வெடித்தன. இதில் பாட்டாலே ஆங்கிலேயரை பயமுறுத்திய பெண்மணிகள் தேசபக்தி பாடல்கள் பாடி மக்கள் மனதில் சுதந்திர எழுச்சியை தட்டி எழுப்பினர்.இவர்கள்  கணீரெனப் பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட தொண்டர்கள் ஏராளம்.

தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் தனிஆர்வம்காட்டி வந்தபெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:

 எஸ்.ஆர்.ரமாமணிபாய்:

"ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டேசுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே"
என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:

 இவரது  குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப்பற்று உள்ள பாடல்களைஅம்மையார் பாடினார்.காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம்பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும்.வை.மு.கோ. அம்மையார் இசையில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். கருநாடக இசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவராக இவர் இருந்தார். அத்துடன் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் இசைஆற்றலை வெளிக் கொணரப் பாடுபட்டுள்ளார். அந்த வரிசையில் ஒருவர் புகழ் பெற்ற டி.கே.பட்டம்மாள் ஆவார். 
வை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் இரசித்ததாகக் கூறுவார்கள். அம்மையார் வானொலியிலும் இசைநிகழ்ச்சிகளை வழங்கி அதனை இசைத்தட்டுக்களாகவும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார்.


டி.கே.பட்டம்மாள்:

பாரம்பரியம் சார்ந்த மனத்தடையையும், பழமைவாதத்தையும் மீறுவதில் அக்காலகட்டத்தில் தீவிரமாக நிலவிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் பெரும்பங்கு இருந்தது. பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளில் பற்று கொண்டவர்; தீவிர காங்கிரஸ் அபிமானி. பட்டம்மாள் பள்ளி நாட்களில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் இறைவணக்கம் பாடியிருக்கிறார். அவ்வளவு கட்டுப்பெட்டியான நாட்களில் கூட பொதுக்கூட்டங்களில் எப்படி பட்டம்மாளால் பாடமுடிந்தது என்று கேட்டதற்கு “தேசபக்திக்கு முன்னால் வேறெதுவுமே தூசுதான். அதனால் தேசபக்திக் கூட்டங்களில் பாடுவதற்கு என் தந்தை எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்று சொல்கிறார் பட்டம்மாள். தேசத்துக்காக எந்த சமுதாய வழக்கத்தையும் மீறலாம் என்று நினைத்துப் பல சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் தன் மகள் பட்டம்மாளை இறை வணக்கம் பாட வைத்திருக்கிறார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அதைப் போலவே பட்டம்மாள் ஒரு பாடகராகப் பரிமளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த டாக்டர்.சீனிவாசன்  காங்கிரஸ் உறுப்பினர் ஆவார்.

பாரதியார் பாடல்களில் பெரிய அத்தாரிட்டியாகவே கடைசிவரை விளங்கினார் பட்டம்மாள். பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே,’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,’வெற்றி எட்டுத்திக்கும்,’ ‘விடுதலை, விடுதலை, விடுதலை,’ போன்ற பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் பட்டம்மாளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

கே.பி.சுந்தராம்பாள்:

 மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய பாடல்களான
  • காந்தியோ பரமஏழை சந்நியாசி
  • தாயிடம்அன்பில்லாத சன்மம் வீணே
  • நம்பிக்கை கொண்டெல்லோரும இராட்டை  சுற்றுவோம்
  • காந்தி லண்டன் சேர்ந்தார்
என்ற நான்குபாடல்களையும் கே.பி.சுந்தராம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார்.
 உப்பு சத்யாக்கிரகத்தையொட்டி காந்தி சிறை சென்ற போது "காந்தியோ பரம ஏழை சந்நியாசி" என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசைத்தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது. 
1932 ஆம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களை தூக்கிலிட்டு கொன்றபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான “பகத்சிங், ராச குரு, சுகதேவ் சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா …பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை பாரத மாதா” என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடி இசைத்தட்டில்  பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது. இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்குவர்.


எம்.ஆர்.கமலவேணி:

புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான இவர்  பல தேசியப்பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் இவ்வியக்கத்தின்போது தடை செய்யப்பட்டது. இவர் பின்வரும் பாடலான
அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க
அகிம்சைப்போர்தொடுத்தார் காந்திமகான்

என்றப் பாடலை உணர்ச்சியோடு பாடி ஹார்மோனியம் வாசித்தார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தன் ஒருவயது கை குழந்தையுடன ஆறுமாதம் சிறையிலிருந்தார்.பாடகியும், நடிகையுமான எம்.ஆர்.கமலவேணி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலும் பாடுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்.

 மதுரை  எம்.கண்ணம்மாள்:

இவர்  பாடிய "சத்யமெங்குமே தளரா நாடு-இந்து தேசமதைப்புகழ்ந்துபாடு….” என்ற பாடலும் பிரபலமானவை.

Aucun commentaire:

Enregistrer un commentaire