பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 31 mai 2014

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். 'எல்லோரும் உலகை மாற்றி விடத் துடிக்கின்றனர். ஆனால் எவரும் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை' - லியோ டால்ஸ்டாய்  கூறியுள்ளார். பொருள் பொதிந்த, ஆழமானக் கருத்து!

நாம் அனைவரும் நம் கண்களையும்,  உணர்வுகளையும், அனுபவங்களையும் கொண்டே உலகைக் காண்கிறோம். அவை சொல்லும் முடிவு கொண்டு எல்லாவற்றிற்கும் நியாய, அநியாயத்  தீர்ப்பு  வழங்குகிறோம். அதற்கு மாறான ஓர் பக்கம் இருக்கக் கூடும் என்பதே நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதை ஒப்புக் கொள்வதில்லை. முன்பு கொண்ட நமது கருத்து தவறென்று கண்டபின்னும் அதை ஏற்கும் பக்குவமோ, மாற்றிக் கொள்ளும் குணமோ இன்றி, தன் முனைப்பால் அதையே நிலை நாட்ட முயல்கிறோம்.பிரச்சனையே இங்குதான் ஆரம்பிக்கிறது.

வீட்டில் பெரியோர் சொல்லும் விளக்கங்கள் காரணத்தோடு இருக்கலாம் என்ற எண்ணமோ, குழந்தைகளின் எண்ணங்களை மதிப்பதில் தவறில்லை என்ற முடிவோ நமக்குப் பிறப்பதில்லை. இரு சாராருமே தங்கள் கொள்கையிலேயே ஊன்றி, அதைச் செயல்படுத்த முனைகையில் விரிசல் ஏற்படுகிறது. குடும்ப உறவுகள் பிளவு படுகின்றன. ஒன்று சேரா வகையில் தனித்தனி தீவுகளாகின்றனர். தொடர்பு அறுந்து போகும் இந்நிலையால் யாருக்கும் எந்த இன்பமும் கிட்டப்போவதில்லை.

தனி மனித வாழ்வின் இந்தச் சீரழிவு, சமூகத்தையும் பாதிக்கிறது. மன அமைதிக்கான ஆறுதலோ, மகிழ்வுக்கான பகிர்தலோ இன்றி மனங்கள் வக்கரித்துப் போகின்றன. எந்த முறையில் யாரைத் துன்புறுத்தலாம் என்பது போன்ற அரிப்பால் எப்போதும் கனன்று கொண்டிருக்கின்றனர். அற்பச் செயல்களுக்கு கோபமும், வன்மமும் கொண்டு பிறர் மனதைக் காயப்படுத்துகின்றனர். கூட்டமாகச் சேர்ந்துவிட்டாலோ இவர்கள் வன்முறை எல்லை மீறுகிறது.

அரசோ, சட்ட திட்டங்களோ, தண்டனையோ இந்நிலையை மாற்ற இயலாது. அறிவும், வயதும் கொண்டவர்கள் சிந்தித்து, தங்களையே மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி. பிறர் நிலையிலும் நின்று யோசிக்கக் கற்பதும், நேர்மையான முறையில் வழி காண்பதும் மட்டுமே அனைவரையும் ஒன்று சேர்க்கும். உள்ளார்ந்த நட்பும், இணையும் உறவும், அமைதியும் இன்பமும் அப்போதுதான் பிறக்கும். உலகமும் பிறகே உய்யும்.

திருமதி சிமோன்  

Aucun commentaire:

Enregistrer un commentaire