பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 31 mai 2014

அன்னை என்னும் அற்புதம்

‘சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் ‘உன்னைப் பெற்ற தாயின் காலடியில்’ என்று சொல்கிறது ஒரு பழமொழி.

அன்னையர் தினம் கொண்டாடி முடித்திருக்கும்  இந்த வேளையில் மகான்கள், பெரியோர் - இவர்களின் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் செய்திகள் இதோ:

பற்று அற்ற துறவிகள் எந்த பாசத்தையும் உறவையும் துண்டித்து விட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும்,அன்னையின் ஈமச் சடங்கு நடத்திய தனயன்கள்:

பட்டினத்தார்:


தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார்.  அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார்.  இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர்  ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் "ஐயிரண்டு திங்களாய் "  என தொடங்கும்  10 பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது.  அந்தப் பாடல்:
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல் 
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
ஆதிசங்கரர்:
தாய் ஆர்யாம்பாளின் பிரிவு

இளவயதிலேயே தந்தையை இழந்தார்--தாயாரால் வளர்க்கப்பட்டார் ----7 வயதில் தன் தாயாரிடம்  அனுமதி பெற்று   சன்னியாசம் வாங்கிக்கொண்டார்.அவர் தன் தாயிடம்"அம்மா உன் அந்திம நேரத்தில் எங்கிருந்தாலும் நான் உன்னிடம் வந்துவிடுவேன்,நீ கவலைப்படாதே"என்று வாக்கு தந்துவிட்டுத்தான் சன்னியாசம் சென்றார்.
சிருங்கேரியில் இருக்கும் போது, திடீரென்று ஒருநாள்  தம் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதையும், அவளுடைய இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் யோகசக்தியால் சங்கரர்  உணர்ந்தார். தம் சீடர்களிடம் தாயின் நிலையைக் கூறிவிட்டு, ஆகாயமார்கமாக காலடி வந்தடைந்தார். தாயாரைத் தேற்றினார். மகனைக் கண்டதில் தாயாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தாயாரைப் பார்த்து சங்கரர் மிக்க அன்புடன், அம்மா! கவலைப்படாதே. உனக்கு என்ன ஆசை என்று கூறு என்றார். தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தாயார் கேட்க, சங்கரரும் உடனே சிவபுஜங்கம் என்ற ஸ்தோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார். சிவகணங்கள் உடனே அங்கு தோன்றினர். அவர்கள் சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி இருந்தனர். இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார். மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது. உடனே விஷ்ணு தூதர்கள் தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார் சங்கரர். உறவினர்களும், ஊர்க்காரர்களும் சன்னியாசியான சங்கரர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்றனர். சங்கரர் மனம் தளரவில்லை. தான் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. உடனே சங்கரர் உலக சம்பிரதாயத்தையும் மீறாமல், அதே சமயத்தில் தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், தன் வீட்டுக்கருகில் கட்டைகளை அடுக்கி தன் யோகசக்தியால் வலது கையிலிருந்து அக்னியை உண்டு பண்ணி அதனால் தாயாரின் தகனக்கிரியைகளை செய்து முடித்தார்.

சில அனுபவ மொழிகள்:

சுவாமி விவேகானந்தர் 


‘எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். இவ்வுலகில் தன்னலம்  சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக் கொண்டு இருப்பாள்; அதே சமயம் எப்போதும் அன்பைப் பொழிந்து கொண்டே இருப்பாள். அன்னையிடம் நாம் காணும் அன்பைவிட வேறெந்த அன்பு இறைவனின் அன்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க முடியும்? எனவே, ஓர் இந்துவுக்கு இந்த உலகில் தாயே இறைவனின் அவதாரமாகும்.’

 
தாயைப்பற்றி கிருஷ்ணாழ்வார்  அவர்கள் இயற்றிய பாடல்
கருமுதிர்ந்து பிரசவிக்கும் பத்தாம் மாதம்
கால் அசைந்து மேல் மூச்சு வாங்க வாங்க
பெருவயிற்றுச் சுமையோடு தாவித்தாவிப்
பீடுடைய நம்வாசற் படியை அம்மா
ஒருதரம் நீ கடந்தகடன் தீர்க்க இவ்வுலகமுள
வரைக்கும் அது முடியாதேன்றால்
திருமகளே என்தாயே அம்மா அம்மா
தீர்ப்பதென்றோ பெற்ற கடன் செப்புவாயே!


God could not be everywhere and therefore he made mothers.

தாய்மை: அன்பின் தொடக்கமும் சங்கமமும் - Robert Browning

“A mother’s arms are made of tenderness and children sleep soundly in them.” —Victor Hugo

கருவை வளர்த்து, உயர்நலம் சேர்த்துப் பிறப்பிக்கும் பெருந்தவம் பெண்களுக்குரியதே! அது ஒன்றே பெண் உயர்ந்தவள் என்பதற்குச் சான்று பகரக்கூடியது. (குன்றக்குடி அடிகளார்)


 குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய்——–தாக்கரே

சுகமான சுமையை 

இடம் மாற்றினாள் 

தாய்...

பிரசவத்துக்குப் பின் 

வயிற்றில் இருந்து 
இதயத்துக்கு.
(புதுக் கவிதை)

Aucun commentaire:

Enregistrer un commentaire