பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 avril 2014

பாரதியே மீண்டும் வா!


இந்தியா-உச்சரிக்கும் பொழுதில் ஓர் உன்னதம்,பெருமிதம்! கலையும், இலக்கியமும் சேர்ந்து கலாச்சாரத்தை மின்னிப் பிரகாசிக்கச் செய்கின்ற அற்புத தேசம். இன்றளவும் உலக அரங்கில் மதித்துப் போற்றப்படுகின்ற மனித நேயம் மிக்க பூமி. 
புகழ் மிக்க இந்தியா இன்று நம் கையில்! ஆனால் அதன் உண்மை நிலை என்ன!? வான் உயர்ந்த கோபுரங்கள்-மண் பார்க்கும் மனிதர் மனம். பழமையும், கலாச்சாரமும் மிகுந்தவர்கள் என மார் தட்டும் நாம், பெண்ணினத்தை மிதிப்பது ஏன்? பெண்களின் மானம் பறிக்கப்படும்போது கை கட்டி வேடிக்கை பார்ப்பது எதற்காக? 

பாஞ்சாலி முதற்கொண்டு இன்று வரை துகில் உரித்தலே வேலையாகிப் போனது எதனால்? அன்றாவது கண்ணன் காக்க வந்தான்; இன்று கர்ணன் (நட்பு) கூட வருவதில்லை. இருவரையும் படைத்தவர்கள் நாமன்றோ!

பாடினாயே பாரதி, "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று. இன்று நாங்கள் பட்டங்கள் பெறுகின்றோம். சட்டங்கள் செய்கின்றோம். காகிதத்தில் மட்டுமே இவை சாத்தியமாகின்றன.

எங்கள் கைகளின் கட்டுகள் தளர்த்தப்பட்டு அரை நூற்றாண்டுக்கும் மேலாகின்றன. விடுவித்தல் இல்லாது போனதால் இன்றும் நாங்கள் கட்டப்பட்ட நிலையிலேயே! ஐந்து வயது சிறுமி முதல் ஐம்பது வயது பெரியவள் வரை அமில வீச்சுக்கும், பலாத்காரத்துக்கும் உட்பட்டு சீரழிக்கப்படுவது எதற்காக? பெண்ணியத்திற்கு உலகமே குரல் கொடுத்தாலும் அழிக்கப்பட்ட பெண்மை மீண்டு வருவதில்லை! 'புதைக்கப்பட்ட சொர்க்கமாய் மட்டுமே' வாழ்கிறோம்.

புறா தன் இணை தவிர வேறு துணை தேடுவதில்லை. கர்ப்பத்தின் வாசனை கண்டால் காளை  பசுவைச் சேர்வதில்லை. ஐந்தறிவெல்லாம் ஆறறிவாக நடக்கையில், ஆறறிவு படைத்தவன், நீ மட்டும் ஏன் ஐந்துக்கும் கீழே செயல்படுகிறாய்?

நேர் கொண்ட பார்வை - பெண்மை தலை நிமிரத்தான் செய்கிறது. கண் மட்டும் மண் நோக்கித் தள்ளப்படுகிறது. பெண் மகா சக்தியாக மலர நினைத்த பாரதியே, எம்மை மொட்டிலேயே கருக்கி விடுகின்றனரே!

'மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் - பெண்களின் கற்பு மட்டும் தெருவோரங்களிலும், பாலங்களுக்கு அடியிலும் களவு போவது ஏன்?

வாழ்வியலோடு இணைந்தத் திரைத்துறையும் கதையை நம்பாமல் சதையை நம்பிப்  பெண்களைக் காட்சிப் பொருளாகத்தானே காட்டுகின்றன?

வீரம் நிறைந்தத் தமிழ் மண்ணில் எங்களின் மதியை தொலைதூரத் தேசங்களில் தொலைத்து விட்டோம். தொலைத்து விட்டதைத் தோண்டி எடுக்க, எந்தன் தோள்களுக்கும் மனதுக்கும் உரம் ஏற்ற, முண்டாசுக் கவியே உன் மீசை முறுக்கி மீண்டும் வா!

தென்னையும், குயிலும், நதியும் கண்டால் நின்று விடாதே பாட்டா, சிதையில் ஏற்றி விட்ட சீதையாய்  நாங்கள். போர்வாள் ஏந்தி புறப்பட்டு வா. சீதையை மீட்க அல்ல. சிதைக்குத் தீ மூட்டியவர்களை அழிக்கவும், பூமிப் பந்தைப் புரட்டிப் போடவும்! 

இப்போது எங்களுக்குத் தேவை அவசரமாய் ஓர் அக்கினிக் குஞ்சு. பொந்திடை வைக்க அல்ல. நாட்டிடையே உலவும் மனித நேயமற்ற மிருகங்களை எரிக்கவும், தளர்த்தப்பட்ட எங்கள்  கைகளின் கயிறுகளை அறுக்கவும் பாரதியே மீண்டும் வா!

"மனித நேயம் மலரச் செய்வோம். பெண்மை காப்போம்"

மலர்வாணி செயராசு 

Aucun commentaire:

Enregistrer un commentaire