பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 novembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                       

அன்புடையீர்,

வணக்கம். உலகம் முன் போல் இல்லை என்ற புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை இல்லை, சுத்தக் காற்று இல்லை, நல்ல விளைச்சல் இல்லை என்பது போன்ற பல 'இல்லை'களும், சுத்தம் வேண்டும், பாதுகாப்பு வேண்டும், சுதந்திரம் வேண்டும் போன்ற பல 'வேண்டும்'களும் எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

வாழ்வதற்கு எப்படிப்  பிறப்பெடுத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறதோ, அதேபோல  கடமையும் இருக்கிறது. பெரிதாக சேவை எதுவும் செய்யாவிட்டாலும், நம்மைச் சுற்றி, நம் வீட்டில், நமது எல்லைக்குள் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தாலே போதும். இயற்கை இதற்கு மேல் எந்தத் தியாகத்தையும் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை.

உலக நடப்பை எங்கும் பணம் படைத்தவர்களும், அவர்களால் நிரம்பிய அரசாங்கமும் தான் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தங்கள் பைகளை நிரப்ப, ஆயுதங்களை உற்பத்தி செய்து 'வன்முறை கூடாது' என்று சொல்லவும், சிகரெட், மது இவைகளை விற்கும்போது  அவற்றின் மேல் 'மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு', 'குடி குடியைக் கெடுக்கும்', 'புகை உயிரைக் குடிக்கும்' என்றெல்லாம் எழுதவும்தான் முடியும்.

அவரவர் உடலையும், உள்ளத்தையும்,எண்ணத்தையும், செயல்களையும் சீருடன் காப்பது அவரவர் பொறுப்பே! இதை உணர்ந்து இப்போது மவுனமாக ஓர் பெரும் புரட்சி பரவி வருகிறது. புதிதான எதுவும் இல்லை! அந்தக் காலத்தில் தோட்டம், துரவு என்று தமக்கானதை தாங்களே உற்பத்தி செய்து தன்னிறைவும், பகிர்ந்துண்டு வாழும் மனமும் கொண்டக் காலத்தைத் திரும்பவும் நிலை நிறுத்துவதற்கான முயற்சி.

உலக முழுவதிலும் பெயர் பெற்ற நிறுவனங்களையும், அவற்றின் ஆதிக்கத்தையும்  எதிர்க்க இயலாத சாமான்யர்கள், அதே வேளையில் சமூக நலன் பற்றிய அக்கறை கொண்டவர்கள் இச்செயலின் ஆழத்தை மக்களுக்கு விளக்கி, தாங்களே இயற்கை முறையில் பயிரிட்டு, இலவசமாக நல்ல விதைகளை அளித்து, எல்லோரையும் அதில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.

சிறிய தோட்டம் ஆயினும் அதில், தோட்டமே இல்லாவிடினும் தொட்டிகளில் நச்சு கலந்த எருவின்றி, காய்கறிகளைப் பயிரிட்டு, தங்களுக்குப் போக மிகுதியை மற்றவர்க்களித்து, மன நிறைவோ அல்லது சிறு வருமானமோ பெரும் வழி. பரந்த வெளியைப் பலர் குறைந்த  வாடகைக்கு எடுத்துப் பயிரிட்டு, அந்தந்த பகுதி மக்கள் அருகில் சத்தானக் காய்களும், கனிகளும் பெற இடமளிக்கும் வசதி.

பரவி வரும் இத்தொண்டு, சரியான முறையில் எல்லோராலும் பின்பற்றப் பட்டால், நாளை விற்பனை ஆதிக்கம்  ஒழிந்து போகும்.  உடல் நலன் ஓங்கும்.
காற்று சுத்தம் ஆகும். பூமி மீண்டும் பசுமைக் கோலம் பூணும்.

உலகுக்காக என்றில்லா விட்டாலும், நமது உடல் நலத்துக்காக, நமது சந்ததிகளின் நலத்துக்காக, இச்சிறு முயற்சியை செய்துதான் பார்ப்போமே!

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire