பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 septembre 2013

அல்சைமர் நோய்


                                                          

கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் 'உலக அல்சைமர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.இது ஒரு வகையான ஞாபக மறதி நோய்.ஜெர்மன் நாட்டு மனநல மருத்துவரும் நரம்பியல் வல்லுருமான Alois Alzheimer என்பவர்தாம் 1906 -இல் முதல் முறையாக இந்நோயைக்  கண்டறிந்தார். அதுமுதல் இந்நோய் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

 அமெரிக்காவில் சுமார்   55 லட்சத்துக்கு மேல் முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அமெரிக்காவின்   முன்னாள் அதிபர் ரீகன் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்.இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்)  அல்சைமர் நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030 -ஆம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), 2050 -ஆம் ஆண்டில் 11.30 கோடியாகவும் (7.2 சதவீதம்) உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  முதியவர்களைப்  பெரும்பாலும் தாக்கும் இந்நோயினால், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இவர்களுக்கென தனி உலகத்தையே உருவாக்கி வருகிறார்கள்.

பொதுவாக ஒருவரின் 60 வயதில்  அல்சைமர் நோய் இனங்காணப்பட்டு வருகிறது. நரம்பு மற்றும் மனநல பரிசோதனைகள் மூலம் இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதைக்  குணப்படுத்த முடியாது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளித்து நோய் முற்றாமல் பார்த்துக்  கொள்ளலாம்.மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும் ஒருவகை புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவல் காரணமாக நினைவாற்றல் இழப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்குத்  தேவையான வேதிப் பொருள்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல்பிரச்சனை உருவாகிறது.
 இந்த நோயால் பாதிக்கபடுகிறவர்கள்   நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும்  இழந்து போவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்:
  •  பெயர், வாழ்விடம், வயது,  நேரம், தேதி மற்றும் நாளை  மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக் காலச்  சம்பவங்களே மறக்கும். காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • யோசிப்பதில் திணறுவது எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவை.
  • தொடர்பாற்றலில் பிரச்சனை-  தாங்கள் பேசும் மொழியை பயன்படுத்துவதில் பிரச்சனை, சொற்கள் மறந்து போகும்.வார்த்தைகளை கண்டுபிடிக்கத் திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் அல்லது  எழுதுவதில் பிரச்சனை  புதிதாகக்  கற்பதில் பிரச்சனை ஏற்படுவது
  • இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களைக்  கூடத்  துணையில்லாமல் செய்ய முடியாது.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலைச்  சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல், மூர்க்கமாக நடந்து கொள்ளுதல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் மற்றும் காரணமே இல்லாமல் சந்தேகப்படுதல்,
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களைக்  கடைப்பிடிக்கத்  தவறுதல்
    •  சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.
கல்வி, விடா முயற்சியுள்ள மனநல நடவடிக்கைகள், ஊக்குவிக்கும் மொழி என இவை அனைத்தும் அறிவுத்திறனை அதிகரிக்க உதவும்.மேலும்  இவை மூளையைச்  சுறுசுறுப்பாக வைத்து வயதாகும் மூளையைப் புதுப்பிக்கும் என்று கூறுகிறார்  சிகாகோ ரஷ் பல்கலைகழக மருத்துவ மையத்தைச்  சேர்ந்த மருத்துவர் டேவிட் பென்னெட். அதனால் கற்பதை நிறுத்தாதீர்கள். கற்பதைத்  தொடருங்கள்..  இது அல்சைமரை தடுக்கும் என பரிந்துரைக்க படுகிறது .இதைதான் திருவள்ளுவர்,

"தொட்டனைத்து ஊறும்  மணற்கேணி மாந்தர்க்குக் 
 கற்றனைத்து ஊறும்  அறிவு"

'மணலில் உள்ளக் கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல மக்களுக்குக் கற்றக்  கல்வியின் அளவுக்கு அறிவுஊறும். அதாவது மூளை வேலை செய்யும்' என்கிறார்.


அல்சைமர் நோய் தாக்கப்படும் நான்கில் ஒருவர் இளமைப் பருவத்தில் தலையில் காயம் ஏற்பட்டவராக இருப்பர். அதிலும் நடுத்தர வயதினர், தலையில் காயத்தை ஏற்படுத்தி கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோயால் தாக்கப்படலாம்.எனவே தலைக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.

சளி, தொண்டை புண், அல்சர், நுரையீரல் அழற்சி மற்றும் ப்ளூ போன்ற தொற்றுக்கள் அல்சைமரை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் மூளைக்குப் பாக்டீரியாவை அனுப்பும். அதனால் பற்களை நன்றாகத் துலக்கி, அவ்வகை தொற்றுக்களில் இருந்து விடுபடுங்கள்.

வைட்டமின் டி சத்தின் குறைபாடு அதீத அளவில் இருக்கும் போது, அறிவுத்திறன் பாதிப்படைய அதிகம்  வாய்ப்பு உள்ளது.  வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள உணவு, மற்றும் கரித் துகள், க்ரீன் டீ, ரெட் ஒயின் சாப்பிட்டால் இந்நோய் வராமல்  தடுக்க முடியும்.

அமெரிக்காவின் வட கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நம்மூர் மஞ்சளின் மகிமையை உறுதி  செய்துள்ளார்கள்.மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்கிற உட்பொருள் மூளைக்குள் இருக்கும் நரம்பு மண்டலத்தில் உருவாகும்  புரோட்டீன் அமிலத்தன்மையின் பரவலைத் தடுக்க வல்லது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான நம்மூர்  பேராசிரியர் முரளி துரைசாமி.

அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகள்:

தானிய வகைகள்:குறிப்பாகப் புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ள கோதுமை, பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகியவை.மேலும் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
ப்ளூபெர்ரி,செர்ரி,தக்காளி,ப்ராக்கோலி,தயிர்,சாக்லெட்,மீன், முட்டை, மாட்டுக்கறி, கடல் சிப்பி. கடல் சிப்பியில்  துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும். மனத்தை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.
 தினமும் 3அல்லது 5 கப் காபி பருகினால், அல்சைமர் நோயில் இருந்து 65 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று ஐரோப்பாவில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.
காபி பிடிக்கவில்லையா?   ஆப்பிள் ஜூஸ் பருகுங்கள்.- ஞாபக இரசாயனமான அசிடில்கோலினின் உற்பத்தியை ஆப்பிள் ஜூஸ் அதிகரிக்கச் செய்யும். அதனால் இது அல்சைமரை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.
முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயைத் தவிர்க்க முயலுவோம்.

பெரும்பாலும் முதுமையில் தாக்கக்கூடிய டிமென்ஷியா எனப்படும் நினைவிழப்பு நோய் இந்த நூற்றாண்டில் உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரும் மருத்துவ,  சமூக நெருக்கடியாக உருவாகியிருப்பதாக அல்சைமர் (Alzheimer) நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியா சீனா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டினரின் ஆயுட்காலத்தைக் கூட்டி வருவதால் இந்த ஞாபகமறதி நோயும் அது ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சுமையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவ்வுலக அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நோயால் தாக்கப்பட்ட தாயுடன் மகன்படும் அனுபவங்களை  Forget Me Not திரைப்படம்  சித்தரிக்கிறது.. இத்திரைப்படத்தின் உண்மையான ஜெர்மனிய பெயர் VERGISS MEIN NICHT.   முடிந்தால் ஒருமுறை பாருங்கள்.

'a journey of caring' - 'நலம் பேணும்  பயணம்' என்பதே இந்த ஆண்டின்  விருது வாக்கியமாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட  முதிய தலைமுறையைக்  காக்கத்  தேவையான செயல்களில் நம்மையே ஈடுபடுத்திக்  கொள்வோம்.

லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire