பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 juin 2013

எண்ணப்பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். உலகமும், அதிலுள்ள சீவராசிகளும் ஒரு நியதிக்குள் அடங்கிச் செயல்படுகின்றன. 'நியதி' வடச்சொல் என்று முரள்வோர் 'வரைமுறை அல்லது விதி' என்று இதனைக் கொள்ளலாம். எனினும் அந்தப் பொது விதிக்கு புறம்பாக நடக்கும் ஆயிரமாயிரம் செயல்களைக் கண்கூடாகக் காண்கிறோம். அவற்றுக்கு நமது பார்வையில் பொருளோ, காரணமோ தென்படுவதில்லை. அதற்காக அவைகளுக்குக் காரணமும், பொருளும் இல்லை-இருக்காது என்பது பேதைமை! நமது புலன்களுக்கு எட்டாத ஏதோ ஒன்றின் பரிமாணமா கவே அந்தப் புற விளைவுகள் காணப்படுகின்றன. அதனைக் கண்டு மலைத்துப் போகத்தான் நம்மால் முடிகிறது.

பொதுவாக உலகத்தின் சிறந்த படைப்பு மனிதன் என்று நாமே சொல்லிக்கொள்கிறோம். இதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.  ஏனெனில் இவனால் முடியாதது எதுவுமே இல்லையோ என்று எண்ணுமளவுக்கு ஒவ்வொருத் துறையிலும் இவன் அடைந்த வெற்றிகள் கணக்கில் அடங்காதவை. அதே நேரத்தில் இவனால் எந்த அளவுக்குக் கீழே போக முடியும் என்பதற்கும் இவனே எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

புறவிளைவு ஓர் உயர்ந்த லட்சியத்தின் வெளிப்பாடாகவும்,பிறரால் எளிதில் கைக்கொள்ள இயலாததாகவும் இருந்தால் அது மனித குலத்திற்குக் கிடைத்த பெரும் செல்வமாக நிலைத்து விடுகிறது. கோடிக்கணக்கான மனிதர்களில் கரம் சந்த் காந்தியால்தான் உடைகளைத்தூக்கி எறிந்து விட்டு, ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு தன்னை எதிர்த்தோரிடையே, அவர்களது நாட்டில், அவர்களையே நாணமுறச் செய்யும் வகையில் நடமாட முடிந்தது. அந்த உள்ள நேர்மை, சத்தியத்தின் பிரதிபலிப்பு இன்றளவும் பிரமிக்க வைப்பதாய், பின்பற்ற முடியாததாய் நின்று மனதால் வழிபட வைக்கிறது.

ஆனால்  பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் அடுத்தப் பக்கம் நமக்குத் தெரிவதில்லை. அந்த முகம் பலவீனம் கொண்டதாய், பொறமை படைத்ததாய்  பிறரைப் பழி வாங்கும் வன்மம் கொண்டதாய், திரையின் பின் ஒளிந்து நாடகமாடுவதாய் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அதைக் கண்டுணரும் சக்தி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அத்தகு அறிவு இருந்தாலும், ஒன்றும் செய்வதற்கில்லை. அதனால்தான் ஒரு ஞானிக்கு  வள்ளலாரைக் காணும் வரை, தெருவில் சென்று கொண்டிருந்தவர்களை விலங்குகளுக்கு உதாரணமாகக் காட்டத்தான் முடிந்தது. அந்த மாக்களை மக்களாக மாற்ற அவர் முயலவில்லை. ஏனெனில் அவர்களும் ஓர் குறிப்பிட்ட 'விதி'க்குள்தான் செயல்படுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார் போலும்!

உலகில் இனிப்பின் தன்மையைக் காட்ட, கசப்பின் அவசியம் உண்டு என்பது  போல, உயர்ந்தோரின் இயல்பை உணர்த்த மாற்றோரின் இருப்புத் தேவையான ஒன்றே! எல்லோருமே தரத்தால் உயர வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதுவே படைப்பின் சிகரமாகவும் இருக்கும் என்றாலும்,அது அவரவர் தகுதி, தன்னை உயர்த்திக் கொள்ள அவர்கள் கொள்ளும் முயற்சி இவற்றைச் சார்ந்தே இருக்கும். சுய பரிசோதனையும், குற்றங்காணில் திருந்தும் உறுதியும்  ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வரை, இந்த ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும்! அதுவரை  இந்த நுட்பத்தை உணர்ந்தவர்கள், அமைதி காத்து வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire