பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 24 février 2013

பெண்ணின் புதைமணல்

                                                                

பெண் இல்லாமல் வாழ்க்கையில் சுவை இல்லை என்பது  எல்லா ஆண்களுக்கும் தெரியும். இருப்பது இரண்டே குலம்  என்னும்போது, பெண்ணுக்கு ஏற்படும் ஏற்றமோ தாழ்வோ அவர்களைத்தான் சார்கிறது.  அதன் பலனும் அவர்களைத்தான் அடைகிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டால் உலகில் பெரும்பாலான பிரச்னைகளும், துன்பங்களும் தகர்க்கப்பட்டு விடும். ஆனால் உண்மை நிலை நேர்மாறானதாக உள்ளது.

வாழ்க்கை ஓர் இன்பப் பூங்கா என்று எண்ணி அதில் பவனி வரத் தொடங்கும் ஒருத்தி, ஏதோ ஒரு தருணத்தில் யாரோ ஒருவனால் திசை மாற்றப் படுகிறாள். அந்த ஒருவன் அன்பும் பண்பும் உடையவனாக இருந்தால் அவள் பயணம் அமைதியும் அழகும் உடையதாக இருக்கும். இல்லையேல் நரகம் என்ற ஒன்று அவளுக்குத் தேவையே இல்லை! அவளது ஆசைகள், கற்பனைகள், இலட்சியங்கள் எல்லாமே புதைந்து போகின்றன.  அவனோடு சமமாகக் கைகோர்த்து செல்ல விரும்பிய அவளை, அவனே புதை மணலில் அமிழ்த்தி விடுகிறான். கைகொடுப்பார் யாருமின்றி, குரலடங்கி, சிறிது சிறிதாக சுவடு தெரியாமல் அவள் அமிழ்ந்தே போகிறாள்!

இது ஆண்களைக் குறை கூற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதில்லை. கீழ் கண்டச்  செய்திகள் பெண்களின் நிலையை ஐயமற எடுத்துரைக்கின்றன. படிக்கும் போது மனம் நொந்து, தயவு செய்து இவற்றுக்கு முற்றுப்புள்ளி இடுங்கள், சக மனிதப் பிறவியாக அவர்களை  எண்ணுங்கள் என்று கையெடுத்துக் கும்பிட்டு இறைஞ்சத் தோன்றுகிறது:

பெண்களைத் தாயாக மதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடைய தமிழ் நாட்டில்:  விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை ஆண்டுகளில் 83 கற்பழிப்பு, 39 கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. பதிவு செய்யப்படாமல் போனது எத்தனையோ?!

சேலம், தருமபுரி மாவட்டத்தில் பிறப்பு விகிதம் ஆயிரம் ஆணுக்கு 765 பெண்களே ! காரணம் பெண் சிசுக்கொலை !

தொட்டில் குழந்தைகளில் 1545 பேர் பெற்றோர்களால் விரும்பி சேர்க்கப்பட்டவை! 950 கழிவறை, குப்பைத் தொட்டி, சாக்கடைகளில் கண்டுபிடிக்கப் பட்டவை.

குழந்தைகளைத் திருடி, பராமரித்து பிச்சைக்குப் பழக்கும் சமூக விரோதக் கும்பல்கள்  இப்போது பெண்களையும் கடத்தி பிச்சை எடுக்க வைக்கிறார்கள். குழந்தைக்கு போதை ஊசி போட்டு, பசியில் மயங்கி இருப்பதுபோல் பிச்சை எடுக்க வைப்பதில், செலவு போக மாதம் இரண்டு லட்சம் வரை கிடைக்கிறதாம். சில வேளைகளில் போதை அதிகமாகி குழந்தைகள் இறப்பதும் உண்டாம் !

வருடம்தோறும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவத்தின் போது இறந்து போகிறார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


"நம் தேசத்தில் தாயின் கருவறை கூட பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை" - அப்துல் கலாம்

"பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றியவை. இவற்றுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ இடமில்லை. இவை தமிழ்ச் சொற்களும் இல்லை" - பெரியார் (4/5/1973 விடுதலை இதழ்)

திருமதி சிமோன்


Aucun commentaire:

Enregistrer un commentaire