பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 28 septembre 2012

எண்ணப் பரிமாற்றம்



                                         


அன்புடையீர்,

வணக்கம். தொன்று தொட்டு மனித இனத்தையும் கால்நடைகளையும் உணவளித்துக் காத்து வரும் பூமித்தாயின் கருணை சொல்லில் அடங்காதது.பயிர்களும், கனிகளும் இல்லையேல் நிச்சயம் இத்தனை உயிர்களும் வாழ்வும், வளமும் இன்றி மடிந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் அந்த நினைவும், நன்றி உணர்வும் நமக்கு இருக்கிறதா என்பதில் கண்டிப்பாக சந்தேகம் உண்டு..

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்' பரந்த மனம் இல்லாவிடில் போகட்டும் . தேவையின்றி அழிக்கும் அரக்கக் குணம் மறைந்தால் போதும் .அதிர்ஷ்டவசமாக இப்போது சிறுபான்மைக் கூட்டம் ஒன்று அவ்வப்போது  'சுற்றுச் சூழல் மாசு', 'செடி வளர்த்தல்' என்று ஆங்காங்கே குரல் கொடுத்து வருகிறது . தன்னலம் மறந்து இதற்கானப்  பணியினை மேற்கொள்கிறது.

ஆனால் சில செய்திகளை நாம் அடிக்கடி கேட்பதாலேயே அதற்கான  முக்கியத்துவத்தை அதற்கு அளிக்க மாட்டோம்.நமக்கும் அது பற்றித் தெரியும் என்ற அளவில் திருப்தி கொண்டு, 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்கிற கைவசம் உள்ள பதிலோடு,வாழ்வைத் தொடர்வோம். நம்மால் இயற்கைக்கு ஊறு  நேர்ந்தாலும், 'இச் சிறு செயல் உலகத்தையே அழித்துவிடப் போகிறதா, என்ன ?' என்னும் சமாதானம் இருக்கவே இருக்கிறது !

ஒவ்வொருவரும் இதற்காக காடு வளர்க்க வேண்டாம். கொடி பிடித்து கொள்கைப் பரப்புச் செய்ய வேண்டாம். தன்னைச் சுற்றி, தன்னளவில் , தன் குடும்பத்தில் இயற்கையை மதிக்கும் செயல்களைச் செய்தால் போதும். உலகம் உருப்பட்டு விடும். இதற்குத் தேவை மனசாட்சி, அழகை ரசிக்கும்  மென்மை . அவ்வளவே ! ஒரு சிறு தளிரின்  தோற்றம், அதன் பசுமை,  குளிர்ச்சி இவற்றைக்  கண்ணால் காணும்போதே, மனதால் உணர்ந்தால்  அதைக் கிள்ளி  எறியத் தோன்றுமா ? அல்லது அது வளராவண்ணம் அழிக்கத்தான் தோன்றுமா?

 காலங்காலமாய் இருந்து வரும் வேளாண்மையின் முக்கியத்தைச்  சற்றே மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது இயற்கையின்பால் கனிவு கொள்ள ஏதுவாகும் என்னும் நினைவே செயலாயிற்று. இதிலும் நம் சந்ததிகளுக்கான நல வாழ்வின் சுயநலம் மறைந்திருக்கிறது என்பதை மறக்கவோ, மறைக்கவோ இயலாது !

திருமதி சிமோன் 

வேளாண்மையின் தாளாண்மை


                                                     
                                               

10,000 ஆண்டு பழமை வாய்ந்ததும், கிமு 7000 ஆண்டிலேயே இந்தியத் துணை கண்டம் செயல்படுத்தியதும் (கோதுமை, பார்லி உற்பத்தி), கிமு  5200க்கு முன்பே வீட்டில் வளர்க்கப்பட்டதுமான (சோளம், மரவள்ளி,மற்றும் கிழங்கு வகைகள்) விவசாயமே  வேளாண்மை  ஆகும்.

வேள் என்ற சொல்லின் உருவாக்கமான வேளாண்மை என்பதற்கு கொடை-ஈகை-வழங்குதல் என்றொரு பொருள் உண்டு. பயிர்கள் நிலத்தின் கொடை என்பதால்  விவசாயிகள் 'கொடையாளர்' என்ற தகுதியைப் பெறுகின்றனர். 'வேளான்' என்றால் நீரை ஆள்பவன் என்போரும் உண்டு. விருப்புடன் பிறரைப் பேணுதலும் வேளாண்மையே ! இலத்தீன் சொல்லான 'ager-நிலம்', 'cultura-பண்படுத்துதல்', பின்னர் 'cult-வழிபாடு, கல்வி' எனப் பொருள் பெற்று, (தமிழில் கூட கல்வி-அகழ்தல் என்ற பொருளில் குறிக்கப்படும்) பிறகு பண்பாட்டைக் குறிப்பதாகவும் ஆயிற்று. உண்மையில் விவசாயிகள் நிலை கையேந்தும்படி  இருந்தாலும், பொருளில் குற்றமில்லை ! விவசாயம் பற்றிப் பேச என்ன இருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் தோன்றக்கூடியது. அதை புறம் தள்ளுவதாலேயே இன்றைய பசியும், பட்டினியும் மனித முன்னேற்றத்திற்குச் சவாலாக எழுந்து நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

வேளாண்மை என்பது பயிர்களை உற்பத்தி செய்வது, கால் நடை வளர்ப்பு இரண்டையும் உள்ளடக்கியது. இதில் இன்றைய நடைமுறையான நெடு வேளாண்மை (Permaculture), உயிரி வேளாண்மை  (Organic Agriculture), தொழில் நுட்ப வேளாண்மை முறையில் ஓரினச் சாகுபடி (Monoculture) என வகைகள் உண்டு. 6°க்குக் குறைவான வெப்பத்தில் பெரும்பாலும் பயிர்கள் வளராது. ஒவ் வொருபயிருக்கும்  தனித் தன்மை உண்டு.  மழையே ஓரிடத்தில் வளரும் பயிரை முடிவு செய்கிறது. பொதுவாக வண்டல் மண் நிறைந்த சமவெளி வேளாண்மைக்கு ஏற்றது

கோதுமை ஒரு மித வெப்ப மண்டலப் பயிர். காரட் அதே வகை என்றாலும் உயர் பகுதிகளில் செழித்து வளரக் கூடியது. பருத்திக்கு 200 நாட்கள் பனி பொழிவற்ற  சூழல் தேவை. காப்பிக்கு அறுவடையின்போதும், அதற்கு முன்பும் வறண்ட நிலை தேவை. அதே பருவத்தில் சோளம் விளைய நீர் மிகத் தேவை ! இப்படிப் பயிருக்கும்,  மண் வளத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப விவசாயம் செய்வதே நல்  விளைச்சலுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்றது.இமயமலைப் பகுதியின் ஒரே விளைநிலத்தில் 12க்கும் மேற்பட்ட பீன்ஸ்,பருப்பு, திணை வகைப் பயிர்களை வளர்க்கும் அளவு அம்மண் செழிப்பானதாம் !

இதில் தன்னிறைவு வேளாண்மை (சிறிய அளவில் சாகுபடி செய்வது), மாற்றிட வேளாண்மை (சில மலை வாசிகள் ஓர்சில மரங்களை வெட்டி எடுத்து எரித்து விட்டு, அந்த இடத்தில் திணை,கிழங்குகள் வளர்ப்பார்களாம். பின் அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு வேறு இடத்தில் அவ்வாறே பயிரிடுவார்களாம். 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் பழைய இடத்தில் வந்து பயிரிடுவராம்.. மண் இந்த இடைவெளியில் எத்துணை வளம் பெற்றிருக்கும் ?) தீவிர வேளாண்மை (அதிகப்  பருவமழை பெறும் ஆசியப் பகுதியில் நடப்பது-முக்கியமாக நெல்) வணிக வேளாண்மை (இயந்திரம் பயன்படுத்தி அதிக அளவில் பயிரிடப்படினும் மகசூல் சற்றுக் குறைவானது-உம் :கோதுமை) தோட்டப் பயிர் (தேயிலை, காப்பி, ரப்பர்), கலப்புப் பண்ணை (பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு) என பலவகை உண்டு.

வேளாண்மை மூலம் உணவுகள் (தானியங்கள்,காய்கறிகள்,பழங்கள், இறைச்சி), இழைமங்கள் (பருத்தி,கம்பளி,சணல்,பட்டு,ஆளி(ஒரு வகை தானியம்)), மூலப்பொருட்கள் (மரத்தடிகள், மூங்கில்,பிசின்),ஊக்கப்பொ ருட்கள் (புகையிலை,சாராயம்,கஞ்சா,அபினி,கொகெய்ன்,டிஜிடலிஸ் ),இயற்கை எரி  பொருட்கள் (மீத்தேன்,எத்தனால், பயோடீசல்), அலங்காரப் பொருட்கள் (பூ,தாவர வளர்ப்பு,மீன்,பறவை,வீட்டு விலங்குகள்) போன்றவை மனித வாழ்வைச் சுவையாக்குகின்றன.

இந்த வாழ்வின் சுவையை நாமே எப்படிக் கெடுத்துக் கொண்டோம் என்பதுதான் இனி  நமது இனத்தின் வரலாறாக இருக்கும்.

செயற்கையாக மண்ணைச்  சத்தூட்டுகிறோம் என்ற பெயரில், அம்மோனியம் நைட்ரேட்டைக் கலப்பது, 'சுழற்சி முறை பயிர்', 'விலங்கு எரு ஊட்டச் சத்து'களை மதிப்பிழக்க வைத்துவிட்டது.

நவீனச் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி, வருவாயை அதிகரிக்கச் செய்து சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு வழி வகுத்தது.

இறைச்சி உற்பத்தியிலும் எதிர் உயிர்மிகள், பிற வேதிப் பொருட்கள் மனித உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன.

கலப்பு நைட்ரஜன், பூச்சிக்கொல்லி போன்ற ரசாயன உரங்கள் நீரழிவு, புற்று,மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், பார்வைக் குறைவு போன்றவற்றுக்கு காரணமாகின்றன.

தழைச்சத்து (நைட்ரேட்) மழையால் அடித்துச் செல்லப்பட்டு, குடி நீரை அசுத்தமாக்குகிறது. (உலகில் 60% நல்ல நீர் வேளாண்மைக்குப் பயன்படுத்தப் படுகிறது)

டிராக்டரால் மண் அமைப்பு மாறி, இறுகுகிறது.

அதிக ஆழ உழவு காரணமாக, மேல் மட்ட மண் அரித்து செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்நிலை தொடர்ந்தால், 2025இல் 25% மக்களுக்கே உணவு கிடைக்கும் என்று ஆப்பிரிக்க ஐக்கிய நாடு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' தெரிவிக்கிறது.

சர்வதேச ஆய்வறிக்கைப்படி, இந்திய மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தைத் தவிர பாஸ்பரஸ், மக்னீசியம், போரான், துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறைவாக உள்ளது.

இறுதியாக வேளாண்மையில் நுழைந்துள்ள "அழிவுப்  பாதை" மரபணு தொழில் நுட்பம்.:

டிஎன்ஏ விலுள்ள மரபுக் கூற்றைப் பிரித்து, அதே இனத்திலோ, மற்றொரு இனத்திலோ பொருத்தி, புதிய உயிரினத்தை உருவாக்கும் விஞ்ஞானம்.. படைப்பையே மாற்றும் மகத்தான செயல்பாடு. சந்தேகமில்லை ! ஏற்கனவே அரிசி, கத்தரி, பட்டாணி, உருளை முதற்கொண்டு பலவற்றை மரபணு முறையில் மாற்றியமைத்த தாவரங்கள் ஆகச் செய்து விட்டார்கள் ! ஆனால் அதன் திட்டவட்டமான சாதக-பாதகங்கள் இன்னும் தெளிவுறவில்லை. மண்ணின் தன்மை எப்படி மாறும் என்பது தெரியவில்லை. மரபணு நுண்ணுயிர் எப்படி செயல்படும் என்ற விளக்கம் இல்லை. புது நச்சுக்கிருமி உருவாகாது என்பதற்கு உத்தரவாதமில்லை.

இதன் நல்ல வெளிப்பாடுகளாக நோய்,பூச்சி,களை எதிர்ப்பு, ஒளி சேர்க்கைத் திறன் , நைட்ரஜன் நிலைப்பு, அதிக சேமிப்புப் பகுதிகள் கொண்ட வேர்-விதை-காய்கறி, கொழுப்புக் குறைந்த எண்ணெய் வித்து, நோய் எதிர்ப்பு -அதிக உயிர்ச்சத்து 'ஏ ' கொண்ட உருளை, மரபு மாற்றம் செய்த விதை, உயிரி உரம், உயிரி எரிபொருள் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த மரபணுக்கள் மற்றக் காட்டு உயிர்களுடன் கலந்து இயற்கை இனங்களையே அழித்து விடலாம்.

பூச்சி எதிர்ப்பு நஞ்சைப் பெற்றத்  தாவரங்கள் அழிந்தபின் புதைந்து, மண்ணை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடலாம்.

தேனீ,வண்ணத்துப் பூச்சி, மண்புழு இனங்கள்  அழிந்து விடலாம்.

ஆடு-மாடுகள் கூட மறைந்து விடலாம்.(ஆந்திராவில் பி.டி. பருத்திச் செடி இலைகளை உண்டு  1500 ஆடுகளுக்கு மேல் உயிரிழந்தன. மேய்ந்த 12 மயில்கள் இறந்தன )

உலகின் மரபணு விதை விற்பனையில் 2/3 பங்கை 10 விதை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இதனால் இயற்கையாக விதை கிடைக்காது, ஒவ்வொரு முறையும், விவசாயிகள் பணம் செலுத்தி விதை பெற்றாக வேண்டியுள்ளது. மான்சாண்டோ என்ற பன்னாட்டுக் கம்பெனி விற்ற மரபணு மாற்றப் பருத்தியை விதைத்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அந்த மலட்டு 
விதைகளால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.

பூச்சிகள், எதிர்ப்பு நஞ்சுக்கு  எதிரான சக்தியை வளர்த்துக்கொள்வதாய்  அமெரிக்கச் சற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் அறிவிக்கிறது.

ஒரே தன்மை கொண்ட பயிர்கள் என்பதால் ஒரே நோயில் ஒன்றாக எல்லாம் அழியவும் செய்கின்றன. இதன் முடிவு என்னவாகும் எனபது விஞ்ஞானிகளுக்கே தெரியுமோ என்னவோ !

விவசாயிகளுக்கு நச்சு உரங்களால் நுரையீரல் நோய், டிராக்டர் சத்தத்தால் கேட்கும் திறன் இழப்பு, பல வகைத்  தோல் நோய்கள், ஓசோன் ஓட்டை வழி சூரிய ஒளியில் நாள்தோறும் இருப்பதால் ஏற்படும் புற்று அபாயம் என உடல் நல அச்சுறுத்தல்கள் பல. முக்கியமாக  இளம் தொழிலாளிகள் இந்த அபாயத்திற்கு அதிகம் ஆளாகிறார்கள்.

முக்கிய இந்தியப் பிற இழப்புகள்:

இந்திய .விவசாய நில அளவு 37.05% ஆகக் குறைந்து விட்டது.

1993-94 வேளாண்மை உற்பத்தி - 25%
அதுவே 2005-06 இல் 13.03%

உணவு தானியம் 2001-02 இல் 76.89 லட்சம் டன்.
அதுவே 2004-05 இல் 61.40 லட்சம் டன்

மொத்த உலக உணவின்றி இருப்போர் 2.6 கோடி
இந்திய பட்டினியாளர்  65 லட்சம் அதாவது மொத்தத்தில் கால் பகுதி!

1951இல் விவசாயத்தில் ஈடுபட்டோர் 72%
தற்போது 58%

1997 முதல் 2008 வரை 1,82,936 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் .
தற்போது அது 2 லட்சத்து 20 ஆயிரமாக கூடியுள்ளது. இதில் சராசரி 25 முதல் 45 வயதுள்ளவர்களே அதிகம்.

தமிழ் மண்ணின் வேளாண்மை அடையாளமாக உலகெங்கும் அறியப்பட்ட காங்கேயம் காளை அழிவு நிலையில் உள்ளது.

இத்தனையையும் ஒருசேர அறிந்துணர்ந்தபின் நெஞ்சம் கனக்க, பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை அல்லவா ?

திருமதி சிமோன்





.




மனித வாழ்வும், பயிர்களும்

                                                    

மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை உணவு, உடை, இருப்பிடம். இதன் பொருட்டே உலகம் இயங்குகிறது என்றால் மிகையல்ல. எந்த ஒரு ஆக்கமும் இதன் நிறைவில்தான் பிறக்கிறது. அப்படி எவரேனும் இவற்றைப் புறக்கணித்து, எந்த இலக்கையேனும் நோக்கிப் பயணித்தால், உலகம் அவர்களை புறத்தேத்  தள்ளிவிடும். (ஞானத் தேடல் என்பது இந்த எல்லைக்கப் பாற்பட்டது)

இந்த அடிப்படைத் தேவைகளுள் மிக அவசியமான ஒருசிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்:

அரிசி: உலகின் பெரும்பாலோரின் முக்கிய உணவு அரிசி.  தென் கிழக்கு ஆசியாவில் தோற்றம் கொண்டது. முதலில் ஆசிய, ஆப்பிரிக்க நெல் என இரெண்டே வகைகள் இருந்தன. கிமு 4500 க்கு முன்னரே பல நாடுகளில் அரிசி  பயிரிடப்பட்டது.

இந்தியாவில் அரிசி பற்றிய சமஸ்கிருதக் குறிப்பு உள்ளது. பல பழம்பெரும் புலவர்கள் இதுபற்றி பாடியுள்ளனர்.நெல் நடல், அறுவடை பண்டிகைகளும் இன்றுவரை நடைபெற்று வருகின்றன.

2004இன் உலக நெல் உற்பத்தி 68% ஏற்றுமதி 6% பெரும்பாலும் அந்தந்த நாட்டிலேயே அதற்கான தேவை உள்ளது. அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் தாய்லாந்து,வியெட்னாம் , அமெரிக்கா . இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தோனேசியா, வங்கம், பிரேசில்.

இந்தியாவில் மணம்  மிகு 'பாஸ்மதி', நீள, சன்னமான 'பாட்னா', குட்டையான 'மசூரி', தென்னிந்தியாவில் நீள, சன்னமான 'பொன்னி' இவை பெயர்பெற்றவை.
வேகவைக்காத அரிசி 'பச்சரிசி' என்றும், வேகவைத்தது 'புழுங்கல் அரிசி' என்றும் அழைக்கப்படும்.பின்னது பல சத்துக்களை இழக்காதது. விரைவில் செரிக்கக்கூடியது. தாய்லாந்தின் நீள அரிசி, மல்லிகை மனம் கொண்டது. இதில் 'அமைலோபெக்டின்' குறைவாக உள்ளதால், வேக வைக்கும்போது ஒட்டாது.

மரபணு ஆராய்ச்சியில் அதாவது எந்தக் குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த 'மரபணுத் தாங்கியில்' எவ்விடத்தில் உள்ளது என்னும் வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லுக்கு உண்டு.

தற்போது வைட்டமின் 'A' (பீட்டாகரொட்டின்) அதிகம் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்ரகம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் பலன் இன்னும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை.

அமெரிக்கா தன் நீள  அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய  கலப்பின அரிசியான 'டெக்ஸ்மதி' க்கு காப்புரிமைப்  பெற முயல, தற்போது அது சர்ச்சையில் உள்ளது.

போதுமான அரிசி விளைந்தாலும், அது மனித உயிர் அத்தனையையும் போய்ச் சேரும்போது தான் உலகில் பசி, இல்லாமை ஒழியும்!

பருத்தி : உலகில் வருடத்திற்கு 25 மில்லியன் டன் உற்பத்தி ஆகும் பருத்தி மனிதர்களுக்கு ஏற்ற இலகுவான எல்லா சீதோஷனத்திற்கும் ஒத்து வரக்கூடிய உடம்புக்கு எந்தக் கெடுதலும் தராத ஒன்று.

இழைகளைப் பிரிக்கும்போது 10% மட்டுமே வீணாகும் பருத்தி,  சிறிதளவு புரதமும்,மெழுகும் அகற்றப் படும்போது, அதிலுள்ள இயற்கை செல்லுலோஸ் மூலம் உறுதி, நிலைப்புத்தன்மை, உறிஞ்சும் தன்மை பெறுகிறது. ஒவ்வொரு இழையும் 20-30 செல்லுலோஸ் கூறுகளால் முறுக்கப்பட்டு உருவாவதால் நூல் நூற்க ஏற்றதாகிறது.

எகிப்தில் கிமு 12000 இலேயே பருத்தி விளைந்ததாகக் கூறுகிறார்கள். பருத்தி அதிகமாக விளையும் மெக்சிகோவில் 7000 ஆண்டுகளுக்கு முன்பே இதன் உபயோகம் இருந்துள்ளது. இந்தியாவில் கிமி 5000-4000 இற்கு இடைப்பட்டக் காலத்தில் சிந்து வெளிப்பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டது.கிமு 1500இல் ரிக் வேத சமயத்தில் பருத்தி பற்றிய சான்று உள்ளது. கிமு 2500இல் கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் 'மரத்திலிருந்து ஒருவகை கம்பளி எடுத்து ஆடை ஆக்குகிறார்கள்' என்று குறிப்பிடுகிறார்.

1840களில் இயந்திர மயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தி வழங்கும் திறனை இந்தியா இழந்தது.கப்பல் செலவு குறையும் அமெரிக்கப் பருத்தி, அடிமை மக்களால் உற்பத்தி செய்யப்பட்டதால் இன்னும் மலிவாக அவர்களுக்குக் கிடைத்ததே காரணம்.உறுதித் தன்மையும் சற்று  இதில் அதிகம்.

1996 இல் புழு எதிர்ப்புத் திறன்  மரபணு கொண்ட  பி.டி. பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது. '98 இல் புழுவால் பெரும்பகுதி பருத்தி அழிய நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

உடைகள் மட்டுமன்றி, மீன் வலை, கூடாரம், புத்தக அட்டை போன்றவற்றுக்கும் பருத்தி தேவைப்படுகிறது. சீனரின் முதல் காகிதம் பஞ்சு இழையால் செய்யப்பட்டதே ! அமெரிக்க டாலர் நோட்டு, அரசாங்கக் காகிதங்கள் போன்றவைகளில் பஞ்சு இழைகள் உள்ளன. 'டெனிம்' முரட்டுத்துணி பருத்தியால்தான் செய்யப்படுகிறது. பஞ்சு பிரித்தப்பின் விதையிலிருந்து பருத்தி எண்ணெய் எடுக்கப்பட்டு, சமையலுக்கு உபயோகம் ஆகிறது. எண்ணெய்  பிரித்தபின் கிடைக்கும் 'புண்ணாக்கு' கால்நடைகளுக்கு தீவனம்  ஆகிறது.

இப்படி முழுதும் உபயோகம் ஆகும் பணப்பயிராக இருந்தபோதும், பயிரிடும் வேளாளருக்குக் குறைந்த ஊதியம் மட்டுமே தரும் பயிர் பருத்தி !

மரம் : 300 அடி உயரம் வளரக் கூடியதாய், ஈராயிரம் ஆண்டுகள் வாழக்கூடியதாய் உள்ளவை சிலவகை மரங்கள். பொதுவாக 15 அடி உயரம் உள்ளவை. தனி அடிமரம், கிளைகள் பரப்பி வளரும். வளரும்போது அதில் உருவாகும்வளையங்களைக்கொண்டுவயதைக்கணிக்கலாம்.கிளைகளில்லா, இலைகளில்லா, பட்டைகளில்லா மரங்கள் உண்டு. மரத்தின் விட்டம் 7 செ .மீ . வரையறையில் காகித உற்பத்தி போன்றவற்றுக்கு உதவும். இதுவே  விற்கப்படக் கூடிய குறைந்த விட்டமாகும்.

பண்பாட்டிலும், சமயங்களிலும் முக்கிய குறியீடுகளாக மரம் காட்டப்பட்டுள்ளது. செர்மனி-நத்தார், யூதம்,கிறிஸ்தவம்-அறிவு,பவுத்தம்-போதி, இந்து-கற்பகத்தரு.

முன்பு வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட, தொழிற் புரட்சிக்குப் பின் நகராக்கம் அந்த வேலையைச் செய்கிறது! உலக மக்கள் தொகையில் 16% மட்டுமே கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், வட அமெரிக்கா, தொழில் துறையில் உலகம் பயன்படுத்தும் மரப்பொருட்களில்  பாதியைப் பயன்படுத்துகின்றன ! உலகில் நிமிடத்திற்கு 9 ஹெக்டேருக்கும் மேல் காடுகள் அழிக்கப்படுவதாக ஐ நா தகவல் அளித்துள்ளது ! இந்தியாவில் 1951 முதல் 1980 வரை 5 லட்சம் காடுகள் அணைக்கட்டு பாசனத் திட்டத்திற்காக அழிக்கப்பட்டன .

காடுகள் அழிந்தால், அதன் மூலம் வறண்ட பகுதி, நாளடைவில் தரிசாகி விடும். அதிக மேய்ச்சல், சூறையாடல், மேல் மண் இழப்பு இவை காடுகள் மறைந்து, பாலை நிலம் தோன்றக் காரணமாகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் காடுகள் அழிந்தால், பூமி மேல் உப்பு ஓடு படிந்து மண் இறுகும்  அல்லது சிலிக்கா தாது பொருளால் மண் இறுகி நீர் உட்புக இயலாது, அவ்விடத்தில் மீண்டும் வேர் பிடிக்காது.

தற்போது மனித இனம் நோயின்றி வாழ்வதற்கும்,  தட்ப-வெட்ப மாறுபாட்டால் இயற்கையைச்  சீரழியாமல் பாதுகாப்பதற்கும் மரங்கள் எத்துணை இன்றியமையாதவை என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மரங்கள் நடுவதோடு நின்று விடாமல் அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்பும் இருந்தால், வருங்காலம் செழிப்புறும்.

திருமதி சிமோன்
  

வெண்மைப் புரட்சி



                                                 


இந்தியாவின் தேசியப் பால் பண்ணை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர் வர்கிஸ் குரியன் என்பவர்  1970  -இல்  ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமான  இது உலகத்திலேயே மிகப் பெரிய பால் உற்பத்தித் திட்டமாகும்.  இது வெள்ளை நடவடிக்கை (Operation Flood)   என்று அழைக்கப்பட்டது.  பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளையும் பால் வீணாவதைத் தடுக்கும் உத்தியையும் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்.குஜராத்தின் ஆனந்த் நகரில் அவர் தொடங்கிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களால் பால் உற்பத்தி அதிகரித்தது.குஜராத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவரது வெண்மைப் புரட்சி நாடு முழுவதும் பரவியது. அக்காலத்தில் (1950)  இந்தியாவின் பால் உற்பத்தி நாள் ஒன்றுக்குச் சில ஆயிரம் லிட்டர்  அளவில் இருந்தது. இவரது முயற்சியால் ஒரு நாளைக்கு 90 இலட்சம் லிட்டர் என்ற பிரமாண்ட அளவை இந்தியாவின் பால் உற்பத்தி எட்டியது.  அமுல் பால் பொருள் உற்பத்தி நிறுவனம்  தோன்றியதும் இவர் முயற்சியால்தான். பல நாடுகள் பசும் பாலில் இருந்து மட்டுமே பால் பவுடர் தயாரிக்க, இங்கு எருமைப் பாலில் இருந்தும் பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது.இன்று நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 200  -உக்கும் மேற்பட்ட  கூட்டுறவு பால் பண்ணைகள்  உள்ளன.
பால், வெண்ணை,  தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரிம், சாக்லேட் உட்படப் பல பொருள்களை அமுல் தயாரிக்கிறது.     அமுல் நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆவின்,நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல நிறுவனங்கள் தற்பொழுது உள்ளன.
இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கிஸ் குரியன் அவர்கள் தனது 90  -ஆவது வயதில்   09 09 2012 அன்று  குஜராத்தில்  இறைபாதம் சேர்ந்தார். இந்திய  குழந்தைகள்  ஒவ்வொருவரும் இவருடைய புகழ் கூறக் கடமைப் பட்டவர்கள்.    

லூசியா லெபோ 

mercredi 26 septembre 2012

பெண்களும் வேளாண்மையும்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழ்மையைப்  போக்கி மக்கள்    அனைவருக்கும் உணவு கிடைக்க விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உற்பத்தி செய்த பொருட்களைச்  சந்தைப் படுத்துதல், பாதுகாத்தல் ஆகிய துறைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இது இன்றைய அறை கூவலாக இருப்பினும் இத்தகைய செயல்பாடுகளில் பண்டைய காலம் தொட்டு  மகளிர் பங்களிப்பு இருந்துள்ளது.


நாற்று நடும் பூசை முடிந்த பிறகு நாற்றுக் கொத்துக்களை ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொண்டு பெண்கள் தயாராக நிற்கிறார்கள்.முதல் நாற்றை நிலத்தின் கன்னி மூலையில் சுமங்கலிப் பெண் ஒருத்தி நட்டுத் தொடங்கவும் பிறர் சீராக நாற்று நடத் தொடங்குகிறார்கள். அப்போது நடவுப் பாடல் பாடுவது வழக்கம்.இதோ ஒரு பாடல்:

அடிகொரு நாத்தை நடவங்காடி . .  அடி 
ஆணவம் கெட்ட பெண்டுகளா
பிடிக்கொரு படி காண வேணுமடி . . .அடி
பிரிச்சுப் போட்டு நடவுங்கடி
பொழுதும் போச்சுது பெண்டுகளா
போகணும் சீக்கிரம் புரிஞ்சிக்கடி
புளிய மரத்துக் கிளையிலதான்
புள்ள அழுவுது  கேளுங்கடி 

இன்றும் சில கிராமங்களில் இக்காட்சிகளைக் காணலாம். இப்படித் துவங்கிக் களை எடுத்தல், பயிரைக் காத்தல், அறுவடை செய்தல், தானியங்களைப் பதப்படுத்துதல் எனப் பெண்களின் பங்கு 80 விழுக்காடு உள்ளது( ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மை  வேதனை  ). 
ஆண்களைப் போலவே பெண்களுக்கு விவசாய உற்பத்தி ஆதாரங்களை அணுகுவதற்குச் சமவாய்ப்பு வழங்கவேண்டும். அப்படிச் செய்தால் 20 - 30 விழுக்காடு உற்பத்தி அதிகரித்து சுமார் 10 - 15 கோடி பேர் பட்டினியிலிருந்து விடுபடுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவை பல்கலைக் கருத்தரங்கில் பேசிய வேளாண் விலைபொருள் உற்பத்திக் கமிஷனர் ராம் மோகன ராவ் 'பெண்கள் விவசாயி, விஞ்ஞானியாக  மாறி வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும்" என்றார். அவர்களின் வெற்றிக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
விழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நிர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக 11.80 இலட்சம் ரூபாய்  ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.
வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள பெந்தபுரா கிராமத்தை சேர்ந்தவர் 43 வயதுடைய ரமிலாபென்.12 வருடங்களுக்கு  முன்பு சாதாரண கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவர். பால்பண்ணை கைகொடுக்கத் தற்பொழுது ஒரு கோடி சம்பாதிக்கிறார்.40 பேருக்கு எசமானி.வங்கியில் கடன் வாங்கிச் சிறிய அளவில் ஆரம்பித்தார்  பால் பண்ணையை  .  அவரது கடுமையான உழைப்பு, நேர்மையால்  உரிமையாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார்.
பெண் விவசாயிகளின் மேம்பாட்டுத் திட்டம் துவங்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமைகள் கொடுக்கும் முனைப்பில் நாடு உள்ளது.பெண்களுக்குத் தேவையான பயிற்சிகள், விழிப்புணர்வு, கடன் வசதிகள். . . வழங்கப்பட வேண்டும்.சுய உதவி குழுக்களை ஏற்படுத்திப் பெண்கள் இணைந்து இத்துறையில் சாதனை படைக்க  ஊக்குவிக்க வேண்டும் .பெண், சக்தியின் பிறப்பிடம், சக்தியின் இருப்பிடம். அந்தச் சக்திகள் ஒன்று சேர்ந்தால்!!

லூசியா லெபோ