பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 28 septembre 2012

மனித வாழ்வும், பயிர்களும்

                                                    

மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை உணவு, உடை, இருப்பிடம். இதன் பொருட்டே உலகம் இயங்குகிறது என்றால் மிகையல்ல. எந்த ஒரு ஆக்கமும் இதன் நிறைவில்தான் பிறக்கிறது. அப்படி எவரேனும் இவற்றைப் புறக்கணித்து, எந்த இலக்கையேனும் நோக்கிப் பயணித்தால், உலகம் அவர்களை புறத்தேத்  தள்ளிவிடும். (ஞானத் தேடல் என்பது இந்த எல்லைக்கப் பாற்பட்டது)

இந்த அடிப்படைத் தேவைகளுள் மிக அவசியமான ஒருசிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்:

அரிசி: உலகின் பெரும்பாலோரின் முக்கிய உணவு அரிசி.  தென் கிழக்கு ஆசியாவில் தோற்றம் கொண்டது. முதலில் ஆசிய, ஆப்பிரிக்க நெல் என இரெண்டே வகைகள் இருந்தன. கிமு 4500 க்கு முன்னரே பல நாடுகளில் அரிசி  பயிரிடப்பட்டது.

இந்தியாவில் அரிசி பற்றிய சமஸ்கிருதக் குறிப்பு உள்ளது. பல பழம்பெரும் புலவர்கள் இதுபற்றி பாடியுள்ளனர்.நெல் நடல், அறுவடை பண்டிகைகளும் இன்றுவரை நடைபெற்று வருகின்றன.

2004இன் உலக நெல் உற்பத்தி 68% ஏற்றுமதி 6% பெரும்பாலும் அந்தந்த நாட்டிலேயே அதற்கான தேவை உள்ளது. அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் தாய்லாந்து,வியெட்னாம் , அமெரிக்கா . இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தோனேசியா, வங்கம், பிரேசில்.

இந்தியாவில் மணம்  மிகு 'பாஸ்மதி', நீள, சன்னமான 'பாட்னா', குட்டையான 'மசூரி', தென்னிந்தியாவில் நீள, சன்னமான 'பொன்னி' இவை பெயர்பெற்றவை.
வேகவைக்காத அரிசி 'பச்சரிசி' என்றும், வேகவைத்தது 'புழுங்கல் அரிசி' என்றும் அழைக்கப்படும்.பின்னது பல சத்துக்களை இழக்காதது. விரைவில் செரிக்கக்கூடியது. தாய்லாந்தின் நீள அரிசி, மல்லிகை மனம் கொண்டது. இதில் 'அமைலோபெக்டின்' குறைவாக உள்ளதால், வேக வைக்கும்போது ஒட்டாது.

மரபணு ஆராய்ச்சியில் அதாவது எந்தக் குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த 'மரபணுத் தாங்கியில்' எவ்விடத்தில் உள்ளது என்னும் வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லுக்கு உண்டு.

தற்போது வைட்டமின் 'A' (பீட்டாகரொட்டின்) அதிகம் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்ரகம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் பலன் இன்னும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை.

அமெரிக்கா தன் நீள  அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய  கலப்பின அரிசியான 'டெக்ஸ்மதி' க்கு காப்புரிமைப்  பெற முயல, தற்போது அது சர்ச்சையில் உள்ளது.

போதுமான அரிசி விளைந்தாலும், அது மனித உயிர் அத்தனையையும் போய்ச் சேரும்போது தான் உலகில் பசி, இல்லாமை ஒழியும்!

பருத்தி : உலகில் வருடத்திற்கு 25 மில்லியன் டன் உற்பத்தி ஆகும் பருத்தி மனிதர்களுக்கு ஏற்ற இலகுவான எல்லா சீதோஷனத்திற்கும் ஒத்து வரக்கூடிய உடம்புக்கு எந்தக் கெடுதலும் தராத ஒன்று.

இழைகளைப் பிரிக்கும்போது 10% மட்டுமே வீணாகும் பருத்தி,  சிறிதளவு புரதமும்,மெழுகும் அகற்றப் படும்போது, அதிலுள்ள இயற்கை செல்லுலோஸ் மூலம் உறுதி, நிலைப்புத்தன்மை, உறிஞ்சும் தன்மை பெறுகிறது. ஒவ்வொரு இழையும் 20-30 செல்லுலோஸ் கூறுகளால் முறுக்கப்பட்டு உருவாவதால் நூல் நூற்க ஏற்றதாகிறது.

எகிப்தில் கிமு 12000 இலேயே பருத்தி விளைந்ததாகக் கூறுகிறார்கள். பருத்தி அதிகமாக விளையும் மெக்சிகோவில் 7000 ஆண்டுகளுக்கு முன்பே இதன் உபயோகம் இருந்துள்ளது. இந்தியாவில் கிமி 5000-4000 இற்கு இடைப்பட்டக் காலத்தில் சிந்து வெளிப்பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டது.கிமு 1500இல் ரிக் வேத சமயத்தில் பருத்தி பற்றிய சான்று உள்ளது. கிமு 2500இல் கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் 'மரத்திலிருந்து ஒருவகை கம்பளி எடுத்து ஆடை ஆக்குகிறார்கள்' என்று குறிப்பிடுகிறார்.

1840களில் இயந்திர மயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தி வழங்கும் திறனை இந்தியா இழந்தது.கப்பல் செலவு குறையும் அமெரிக்கப் பருத்தி, அடிமை மக்களால் உற்பத்தி செய்யப்பட்டதால் இன்னும் மலிவாக அவர்களுக்குக் கிடைத்ததே காரணம்.உறுதித் தன்மையும் சற்று  இதில் அதிகம்.

1996 இல் புழு எதிர்ப்புத் திறன்  மரபணு கொண்ட  பி.டி. பருத்தி அறிமுகம் செய்யப்பட்டது. '98 இல் புழுவால் பெரும்பகுதி பருத்தி அழிய நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

உடைகள் மட்டுமன்றி, மீன் வலை, கூடாரம், புத்தக அட்டை போன்றவற்றுக்கும் பருத்தி தேவைப்படுகிறது. சீனரின் முதல் காகிதம் பஞ்சு இழையால் செய்யப்பட்டதே ! அமெரிக்க டாலர் நோட்டு, அரசாங்கக் காகிதங்கள் போன்றவைகளில் பஞ்சு இழைகள் உள்ளன. 'டெனிம்' முரட்டுத்துணி பருத்தியால்தான் செய்யப்படுகிறது. பஞ்சு பிரித்தப்பின் விதையிலிருந்து பருத்தி எண்ணெய் எடுக்கப்பட்டு, சமையலுக்கு உபயோகம் ஆகிறது. எண்ணெய்  பிரித்தபின் கிடைக்கும் 'புண்ணாக்கு' கால்நடைகளுக்கு தீவனம்  ஆகிறது.

இப்படி முழுதும் உபயோகம் ஆகும் பணப்பயிராக இருந்தபோதும், பயிரிடும் வேளாளருக்குக் குறைந்த ஊதியம் மட்டுமே தரும் பயிர் பருத்தி !

மரம் : 300 அடி உயரம் வளரக் கூடியதாய், ஈராயிரம் ஆண்டுகள் வாழக்கூடியதாய் உள்ளவை சிலவகை மரங்கள். பொதுவாக 15 அடி உயரம் உள்ளவை. தனி அடிமரம், கிளைகள் பரப்பி வளரும். வளரும்போது அதில் உருவாகும்வளையங்களைக்கொண்டுவயதைக்கணிக்கலாம்.கிளைகளில்லா, இலைகளில்லா, பட்டைகளில்லா மரங்கள் உண்டு. மரத்தின் விட்டம் 7 செ .மீ . வரையறையில் காகித உற்பத்தி போன்றவற்றுக்கு உதவும். இதுவே  விற்கப்படக் கூடிய குறைந்த விட்டமாகும்.

பண்பாட்டிலும், சமயங்களிலும் முக்கிய குறியீடுகளாக மரம் காட்டப்பட்டுள்ளது. செர்மனி-நத்தார், யூதம்,கிறிஸ்தவம்-அறிவு,பவுத்தம்-போதி, இந்து-கற்பகத்தரு.

முன்பு வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட, தொழிற் புரட்சிக்குப் பின் நகராக்கம் அந்த வேலையைச் செய்கிறது! உலக மக்கள் தொகையில் 16% மட்டுமே கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், வட அமெரிக்கா, தொழில் துறையில் உலகம் பயன்படுத்தும் மரப்பொருட்களில்  பாதியைப் பயன்படுத்துகின்றன ! உலகில் நிமிடத்திற்கு 9 ஹெக்டேருக்கும் மேல் காடுகள் அழிக்கப்படுவதாக ஐ நா தகவல் அளித்துள்ளது ! இந்தியாவில் 1951 முதல் 1980 வரை 5 லட்சம் காடுகள் அணைக்கட்டு பாசனத் திட்டத்திற்காக அழிக்கப்பட்டன .

காடுகள் அழிந்தால், அதன் மூலம் வறண்ட பகுதி, நாளடைவில் தரிசாகி விடும். அதிக மேய்ச்சல், சூறையாடல், மேல் மண் இழப்பு இவை காடுகள் மறைந்து, பாலை நிலம் தோன்றக் காரணமாகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் காடுகள் அழிந்தால், பூமி மேல் உப்பு ஓடு படிந்து மண் இறுகும்  அல்லது சிலிக்கா தாது பொருளால் மண் இறுகி நீர் உட்புக இயலாது, அவ்விடத்தில் மீண்டும் வேர் பிடிக்காது.

தற்போது மனித இனம் நோயின்றி வாழ்வதற்கும்,  தட்ப-வெட்ப மாறுபாட்டால் இயற்கையைச்  சீரழியாமல் பாதுகாப்பதற்கும் மரங்கள் எத்துணை இன்றியமையாதவை என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மரங்கள் நடுவதோடு நின்று விடாமல் அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்பும் இருந்தால், வருங்காலம் செழிப்புறும்.

திருமதி சிமோன்
  

Aucun commentaire:

Enregistrer un commentaire