பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 août 2012

நாடக வரலாறு

                                                      

கிட்டத்தட்ட 2000 வருடங்களாக "நாடகம் "  என்றவோர்  கலை மக்களை மகிழ்வித்து வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழில் இது "கூத்து " எனப்பட்டது . ரசிகர் முன் நேருக்குநேர், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட    கதை , பாத்திரங்கள்-அவர்கள் உரையாடல் இவற்றோடு பாடல் , நடனம் ஆகியவற்றின் கலவையே நாடகம். அன்றைய "தெருக்கூத்து" வீதியில் நடத்தப்  பட்டே அப்பெயர் பெற்றது. (இன்றும் கிராமங்களில் இது நடைபெறுகிறது )பின்னர் மேடைகளில் நடிக்கப்பட்டது . அன்று முதல் இன்று வரை பொழுது போக்கு என்றாலும் புத்துணர்ச்சி தருவதாக, நடிப்பவர் - ரசிகர் இருவருக்கும் இடையில் உயிரோட்டம் தருவதாக நாடகங்கள் விளங்குகின்றன .  கலாச்சாரம் , அரசியல் , சோகம் , துக்கம் என கதைக்களன்      எதுவாக இருந்தாலும் உடனடி பலனைக் கண்கூடாக அறிந்து விடலாம் என்பதே இதன் சிறப்பு .

இந்தியாவில் கி .மு . 300 களிலேயே நாடகம் இருந்ததாகக் கூறப்படுகிறது . ரிக் வேத காலத்தில் ஊர்வசி , இந்திரன் -ராணி நாடகக் கலைஞர்களாக  காட்டப்பட்டனர்  முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து , பின்னர் ஹிந்தி ,மராத்தி பெங்காலி மொழிகளிலும் நாடகம் நடத்தப்பட்டது . ராமாயணம் , மகாபாரதம் , அர்த்த சாஸ்த்திரங்கள் நாடக உத்தியைக் கொண்டவை என்கிறார்கள் .பரத முனி இந்திய நாடகத் தந்தை என்றழைக்கப்படுகிறார் . இவரே பேச்சு , பாடல் , இசை , நாட்டியம் இவற்றை நாடகத்தின் அடிப்படையாக உருவாக்கினாராம் ! கி .பி . 15 வரை இந்தியாவில் தமிழ் கேரளம் ,கன்னடம், ஆந்திர -உத்திரப் பிரதேசங்கள் , குஜராத் என  நாடகங்கள் இதே பாணியில் நடத்தப்பட்டன .

அன்னியர் வரவினால் மாற்றங்கள் ஏற்பட , ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்ற ஆரம்பித்தனர் .  1765 இல் இரண்டு ஆங்கில 'காமெடி' நாடகங்கள் மேடையேறின . 1789 இல் காளிதாசரின் "சகுந்தலா " மொழி  பெயர்க்கப்பட்டது . பிறகு போர்ச்சுக்கல் நாட்டினர் பல ஆங்கில நாடகங்கள் மேடையேற வழி வகுத்தனர். விடுதலைக்குப் பின் இன்றைய நாடகங்கள் உருவாயின . திறந்தவெளி நாடகங்களை இந்தியாவில் பிரபலமாக்கியவர் பாதல் சர்க்கார்.  முக்கியமாக நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தார். இவருக்கு  1972 இலேயே நாடகத்திற்காக பத்மஸ்ரீ விருது அளித்தது மத்திய அரசு.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிபி 1246 முதல் '72 வரை 3 ஆம் இராசேந்திர சோழன்  நாடகக் கலையைப் பெரிதும் வளர்த்தான் . 17 ஆம் நூற்றாண்டில் அரண்மனை, கோவில்களில் மட்டுமே நடந்துவந்த நாடகங்கள் மக்கள் மன்றத்துக்கு வந்தன . 19ஆம் நூற்றாண்டில் தெருக்கூத்து கோவிந்தசாமிராவ் இக்கால நாடக முறைக்கு மாற்றினார் .

நாடகத்திற்கு உயிரூட்டியவர்கள் :

பம்மல் சம்பந்த முதலியார் : 1891 இலேயே தமிழ் உரைநடை நாடகங்கள் 100 க்கு மேல் நடத்தியதுமன்றி, நாடக ஆராய்ச்சி நூலும் வெளியிட்டார் .

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் : நடிகர் , இயக்குனர் ஆன இவர் தெருக்கூத்துகளைப் புதுப்பித்து 50க்கு மேற்பட்ட நாடகங்களை நடத்தினார் . நாடகத்தில் திருக்குறள்களைப் புகுத்தினார் . இவரது வள்ளித் திருமணம், பவளக்கொடி , சத்தியவான்சாவித்திரி , நல்லதங்காள் போன்றவை தமிழகத்தில் இன்றும் நடைபெறுகின்றன .

சிசின்னையா : கிருஷ்ண வினோத சபா மூலம் மின் விளக்கொளி, காட்சி அமைப்பு ,வண்ணத்திரை போன்றவற்றை அறிமுகப்படுத்தியதோடு, மேடையில்  மான், பசு ஆகியவற்றையும் நடிக்க வைத்தார் .

உர மளித்தவர்கள் : 

நவாப் இராசமாணிக்கம் :    இவரது நாடகமொன்று 8000 முறை மேடை ஏறியதாம் .

20ஆம் நூற்றாண்டில் 50 ஆண்டுகள் சீரான வளர்ச்சியினை நாடகம் கொண்டது.

சிவ சண்முகம் பிள்ளை 'சம்பூர்ண ராமாயணம் , அரிச்சந்திரா ', போன்றவற்றையும் ,
திக சண்முகம் திக பகவதி போன்றோர் புராணம் ,வரலாறு ,சமூகம் ,விடுதலை  போன்றக் கருத்துகளில் கிட்டத்தட்ட 75 நாடகங்கள்,   'ராஜ ராஜ சோழன் உட்பட அளித்தனர் .

1922இல் கிருஷ்ணசாமி பாவலர் தி .கே .எஸ் . சகோதரர்களுடன் இணைந்து பல தேசியப் படைப்புகள், கதர் வெற்றி உள்ளிட்டு அளித்தனர் .

மனோகர் 'இலங்கேஸ்வரன் ' முதலான நாடகங்களைத் தந்தார் . என்  எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையும் சமூகசீர்திருத்தமும் கலந்தளித்தார் .

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி மூலம் எம் ஜி ஆர்,  பி யு சின்னப்பா  போன்றவர்களும், மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபா மூலம் எம் ஆர் ராதா , சிதம்பரம் ஜெயராமன் போன்றோரும் பிரபலமடைந்தனர் .

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெண்கள் நாடகங்களில் பங்கு கொள்ள ஆரம்பித்தனர் . எனினும் அப்போதிருந்த 69 சபைகளில் 6 சபைகளை பெண்களே நடத்தினர் !

பிறகு விடுதலை இயக்க நாடகங்கள் , நாவல்களை நடித்தல், திராவிட இயக்கங்கள் தங்கள் கருத்துக்களைப் பரப்புதல் என  போக்கு மாறியது .

பாவேந்தர் 50 நாடகங்கள் போல் எழுதினார் .அண்ணா, கருணாநிதி , பாலச்சந்தர் , சோ,மவுலி, விசு எனப் பலர் நாடகத்திலிருந்து திரைக்கு மாறினார்கள் .

சிவாஜி கணேசனைப் பற்றித்தனியே  தான் கூற வேண்டும் .ஏனெனில் அவர்  எங்கிருந்தாலும் , நடிப்புத்தான்  அவரைத் தேடி வரும் ! சிறு வயதிலிருந்தே  நடிக்க ஆரம்பித்த இவர் அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜியம் ' நாடகத்தின் போது 'சத்ரபதி சிவாஜி' ஆகவே மாறிவிட்டதைக் கண்ட ஈவே ராமசாமி புகழ்ந்தது முதல் , அவர் பெயரே சிவாஜி ஆகி விட்டது. தற்காலம் போலன்றி, வாசகர் ஒருவர் கொடுத்தப் பட்டப்பெயரே "நடிகர் திலகம்". இவர் பெற்ற கவுரவப் பட்டங்கள்: பத்ம பூஷன் , தாதா சாஹேப் , என்டிஆர் நேஷனல் அவார்ட் ,செவாலியே (ordre de merit-art & lettres), இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் சிறந்த நடிகர் , ஆப்ரோ-ஆசியன் பிலிம் பெஸ்டிவல் (Cairo, Egypt) சிறந்த நடிகர், பிரசிடென்ட் அவார்ட் 12 (மொத்தம் நடித்தத் திரைப்படங்கள்:300)

வானொலியும் நாடகங்களைப் பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்டது . தேசிய நாடகப்பள்ளி    நாடகப்போட்டி , கலை இரவுகள் , பிரச்சாரங்கள் நடத்துகிறது. நாடகக் கல்வியும் தரப்படுகிறது .நாடக இலக்கண நூல்களும் உருவாக்கப்படுகின்றன . ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன

தொலைக் காட்சி, திரைப் படங்களால் இனி வருங்காலம் நாடகத்திற்கு எப்படி அமையுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !.

திருமதி சிமோன்




Aucun commentaire:

Enregistrer un commentaire