பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 29 juillet 2012

புனிதமும் வரலாறும்

                                                         

மோன்மார்த்று திரு இருதயப்  பேராலயம் :( Basilique Sacré coeur de Montmartre)

16 ஜூன் 1875 இல் ஆரம்பிக்கப்பட்டு முதல் உலக மகா யுத்த முடிவில் 1919 இல் முடிவடைந்த,  ரோமன் கத்தோலிக்கர்களால் கட்டப்பட்டு  தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட   பிரம்மாண்டமான ஆலயம். 

1870 இல் பேராயர் ப்புர்னியர்   (Fournier), 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்  நாட்டின் குலைந்த மனித நேயத்தை, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப்  பெறுவோம் என்று பேசினார். அனைவரது ஆதரவையும் பெற்ற இந்த உரையே தேசிய விருப்பாக (Oeuvre du Voeu National) மாறி இந்த ஆலயமாக உருவெடுத்தது.

இக்கோவில் கட்டப்பட்டுள்ள மலை ஆராதனையின் அடையாளமாக தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. கொலுவா-ரோமன் (gaulois-romains) காலத்தில்  (Mercure-Mars) வழிபாட்டுத் தளமாக விளங்கியது, 3ஆம் நூற்றாண்டில்  ஆயர் தெனிஸ் (Dènis) சித்திரவதை செய்யப்பட்டு இறந்த பின் 11ஆம் நூற்றாண்டில் ( eglise St. Pierre de Paris) 6வது லூயி மன்னனால், அவர் நினைவாகக் கோவிலாக மாறியது. 

1871இல் தேசிய அசெம்ளி வோட் (National Assembly Vote) மூலம் புது ஆலயம் எழுப்ப அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 7 மில்லியன் பிரான் (franc-அந்தக்கால பிரஞ்சுப்  பணம்) நிர்ணயிக்கப்பட்டு, 87 போட்டியாளர்களால் 76 குழுக்களாக 78  திட்டம் சமர்பிக்கப்பட்டு , போல் அபாதி (Paul Abadie) எனும் கட்டடக் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 வருடங்களில் 10 மில்லியன் பக்தர்கள் மூலம், 46 மில்லியன் பிரான் சேகரிக்கப்பட்டது.

பல கலைஞர் களின் ஒத்துழைப்பால் இன்றையக் கோயில் எழுந்தது. இதன் நடுப்பகுதி (central dome) 83 மீட்டர் உயரம் உள்ளது.  கூரைப்பகுதி (plafond) பிரான்சு மொசெய்க்கால் (473.78 மீட்டர் சதுர அடி) வேயப்பட்டது. கோவில் மணி 3 மீட்டர் அகலமும், 18,835 டன்  எடையும் கொண்டது.அதில்  மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இசைக்கருவி பொருத்தப்பட்டது. அதைத் தாங்கி நிற்கும் கருவியே 7,380 கிலோ எடை உள்ளது.   மணி அடிக்கும் சுத்தியலின் எடை 1200 கிலோவாகும்.

பிரான்சின் இரண்டாவது சுற்றுலாப் பயணிகளின் ஆன்மிகத்  தளமாக இக்கோவில் விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அல்லும் பகலும் தெய்வ ஆராதனை நடைபெற்று  வருகிறது.

                                                         

லூர்து:
பிரான்சின் தெற்கில் Midi Pyrénées என்றழைக்கப்படும் பகுதியில் 16,000 குடிமக்களைக் கொண்டது லூர்து நகர். மலைப் பிரதேசம். இயற்கை எழில் கொஞ்சும் இடமாயினும் சண்டை, புரட்சி என அழிவுகளையும் கண்ட இடம். இயேசு பிறப்பதற்கு முன்  முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இங்குண்டு.
1858 ஆம் ஆண்டு பெர்னதேத் என்ற சிறுமிக்கு பலமுறை "மாதா" காட்சி கொடுத்த பிறகு, இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக மாறினாலும், மத பேதமின்றி உலக முழுவதிலிருந்தும் பக்தர்கள் குவியும் புண்ணிய பூமியாயிற்று.

வருடம் முழுவதும் ஆறு மில்லியன் புனித யாத்திரையாளர்களும், 60,000 நோயாளிகள்-ஊனமுற்றவர்களும் இங்கே மாதாவின் அருள் நாடி வருகிறார்கள். உலகின் மிகப் பெரிய யாத்திரை ஸ்தலங்கள் மூன்றில் லூர்தும் ஒன்று. (மற்ற இரண்டு: Notre Dame de Guadalupe-Mexico) இங்கு  குமிழும் பக்தர்கள் பலரும் தனிப்பட்ட விதங்களில் "புதுமை"கள் பலவற்றை உணர்கின்றனர். இது வரை 2,000  தீவிர நோய்கள் விளக்க முடியாத வகையில் சுகப்பட்டதாக திருச்சபைக்கு தெரிவிக்கப்பட்டாலும், அது 66   புதுமைகளையே "அதிசயம்" என்று பிரகடனம் செய்துள்ளது.


                                                      
நோத்ரு தாம் த பரி (Notre Dame de Paris):


பாரீசின் "Paien"  கோவிலாக இருந்த இந்த மாபெரும் பொக்கிஷம், 'கோதிக்,ரோமன்' கலை வடிவங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அரசன் ஏழாம்  லூயி 1163 இல் கட்ட ஆரம்பித்த இந்த வழிபாட்டுத் தலம், 1345 இல் முடிவுற்றது. மேலை நாட்டின் மிகப் பெரிய 'Cathédrale', அதி மேற்றாணியாரின் இருப்பிடம், பிரான்சின் முதல் சுற்றுலாத்தலம் என்ற பெருமைகளை உடையது. இரண்டு உலகப்  போர்கள்,புரட்சி,காலத்தின் அழிவு போன்றவற்றினின்று தொடர்ந்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் இக்கோவில் பிரான்சின் பிரம்மாண்டத்துக்கும், அதன் பெருமைக்கும் ஓர் எடுத்துக்காட்டு! அரச பரம்பரைத் தொட்டு, அரசியல் நிகழ்வுகள் வரை சரித்திரத்தில் பதிக்கப்படும் எல்லாமே இந்தக் கோவிலில்தான் நடைபெறும். உதாரணத்திற்கு ஒரு சில முக்கியச் செய்திகள்:

1239 செயின்ட் லூயி இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள்முடியை இக்கோவிலில் கொணர்ந்து வைத்தார்.
இன்னும் பல நினைவுச் சின்னங்களும் , கையெழுத்துப் பிரதிகளும் பாதுகாக்கப் பட்டுள்ளன.
அரச திருமணங்களும், முடி சூட்டல் விழாக்களும் இங்கு நடைபெற்றன. நெப்போலியன் பாப்பாண்டவர் Pie VII ஆசீரோடு பேரரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
மிகப் பெரிய மனிதர்களின் இறுதிச் சடங்கு இங்கு நிறைவேற்றப்படும். அதற்கான தேசிய புகழாரம் (hommage national) செலுத்தப்பட்ட நபர்கள்: Charles de Gaule, Francois Mitterand, Abbé Pière, Sr.Emmanuelle.
Rio-Paris Air France (Vol.447) விபத்துக்கு உள்ளானபோது அதில் இறந்தவர்களுக்கு இங்கு இரங்கல் அஞ்சலி சமர்பிக்கப்பட்டது.

இந்தக்கோவில் 4,800 சதுர மீட்டர் உள்பரப்புக் கொண்டது. மொத்தமோ 5,500 ச.மீ. நீளம் 127 மீ.-அகலம் 48 மீ. உயரம் -69 மீ. ரோசா வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பூ வேலைப்பாட்டின் அகலம் 13 மீ. சன்னல்களே 113 உள்ளன. இங்குள்ள இசைக்கருவிக்கான குழல்கள் மட்டும் 8,000. , ஒலிக்கும் மணியின் எடை  13  டன் , அடிக்கும்  நாக்கு 500 கிலோ .இன்னும் சிற்பங்கள், கண்ணாடி பூ வேலைகள், மரக் கதவுகளில் செய்யப்பட்டுள்ள நுணுக்கங்கள் என சொல்வதற்கு எண்ணிலாச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

Victor Hugo 'Notre Dame de Paris'  என்றே நவீனம் ஒன்றைப் படைத்திருக்கிறார். குழந்தைகளுக்கான கதைகள், சினிமா,தொலைகாட்சி  என .பலரது படைப்பில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது.

வருடத்திற்கு சுமார் 13.5 மில்லியன் மக்கள் வருகை புரிகின்றனர். (இது 2010 ஆம் ஆண்டு கணக்கு) 2,000 வழிபாடுகள் நடைபெறுகின்றன. (இந்த இடத்தில் பிரான்சில் இருக்கும் "இந்தியத்  தமிழ் ஞானகமும்" தன் பங்குக்கு சில காலம் தமிழில்  வழிபாடுகளை இம்மாபெரும் கோவிலில் நடத்தியது என்பதைப் பெருமையோடு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

திருமதி சிமோன் 


Aucun commentaire:

Enregistrer un commentaire