பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 mai 2012

எண்ணப் பரிமாற்றம்




அன்புடையீர்,

வணக்கம். புத்தகம் என்பது ஒரு வரலாற்றுப் பெட்டகம். அது ஆண்டாண்டுக் கால நாகரிகத்தை, கலாச்சாரத்தை, வாழ்க்கை முறைகளைப் பதிப்பித்துத் தலைமுறை தலைமுறையாய் நிலைக்கச் செய்கிறது.

அது மட்டுமல்ல. அஃதோர் இன்பச் சுரங்கம்.எழுதப்பட்டது எதைப்பற்றியதாயினும் சுவையாக இருந்து விட்டால், மனத்தை இழுக்கும் வார்த்தை எனும் வண்ணத்தால் எண்ணத்தில் வானவில்லின் ஜாலம் காட்டும். பொருளும், மொழியழகும் வலையெனச் சூழ்ந்து நம்மை ஆட்கொள்ளும். காலங்கடந்த மோன நிலைக்கு வழி கோலும். இந்தக் கணணி யுகத்தில், விரல் நுனியில் எத்தனையோ இன்பங்கள் கொட்டிக் கிடந்த போதிலும் ஒரு பழுப்பேறிய பழைய நூலுக்கு உள்ள  கவர்ச்சியை அவை அடைய முடியாது.

கைகளில் தவழும் குழந்தை போன்று, மடியில் இருத்தி, ஊன்றிப் படித்து, அதில் ஆழ்ந்து அனுபவித்து, சற்றே மெய்ம் மறந்து கற்பனையில் அந்த இன்பத்தைப் பன்மடங்காக்கி ஊனுருகி, புதிதாய்க் கண் விழித்ததுபோல்  மீண்டும் கண்களை மேயவிட்டு, ஆங்கோர் புதுக் கருத்தினைக் கண்ணுற்று, வியப்பிலாழ்ந்து அணுஅணுவாய் தன்னை இழக்கும் சுகமிருக்கிறதே, அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்!

எழுதுபவன் எந்த நோக்கில் எதை எண்ணி எழுதினானோ, ஆனால் படிப்பவனோ அதை ஆயிரம் கோணத்தில், வெவ்வேறு பார்வையில், அந்தரங்க உணர்வில் அதன் சுவையைப் பன்மடங்காக்கி விடுகிறான்! அந்தச் சுவை படிப்பவனின் மொழி அறிவு, கற்பனைத் திறன், உள்ளப்பாங்கு பொருத்து வேறுபடும். அதனால்தான் ஒரே நூலின் ஒரே வார்த்தைக்கு ஆயிரம் பேர் ஆயிரம் அர்த்தத்தைக் கொடுக்க முடிகிறது. இந்தச் சுவையான விளையாட்டு  ஒரு போதை போல  அறிஞர்களை மிதக்க வைக்கிறது.

'கவிதை” என்பதோ இந்த இன்பத்தின் உச்சக் கட்டம். வார்த்தைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டுக் கருத்தை முழுதுமாக வெளிப்படுத்தியோ மறைத்தோ அலங்கரித்த அல்லது அப்பட்டமான உண்மையைக் கற்பனையா நிசமா என மயங்கும் விதத்தில் மொழியழகின் துணைகொண்டு வெளிக்கொணரும் உன்னத உத்தியில் மனிதனை வானுலவவைக்கிறது.

இதில் ஒவ்வொரு வார்த்தையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில வேளைகளில் அந்த ஒரு வார்த்தை இல்லையேல் அக்கவிதையே உயிரற்றுப் போய்விடும். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்பதில் 'உதிரம்” என்பதை விடுத்துத் ‘துன்பம் பெருகுதடி’ ‘துயரம் சூழுதடி’ என எந்தச் சொல்லை உபயோகித்திருந்தாலும் இந்த அளவு நம் மனத்தை அது பாதிக்காது. ‘என் உயிர் நின்னதன்றோ’ என்னும் போது அங்கே காதலின் சரணாகதி நம்மையும் வீழ்த்துகிறது.

ஆனால் பெரும்பாலோருக்குக் கவிதை என்றால் ஓர் ஒதுக்கம்.  அதைப் புரிந்துகொள்ள முயலாமையே முக்கிய காரணம். சற்றே ஆர்வத்தோடு ஒரு முறை கவனத்துடன் அணுகினால் போதும். பின்னர் அந்த ரசனை தானே வரும்.இல்லாதவரைச்‘சதுரங்கம்’ மிரட்டும். பழகிய பின்னரோ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் சுவை ஊட்டும். கவிதையின்பமும் அத்தகையதே!


- திருமதி சிமோன்


3 commentaires:

  1. மிக நன்று
    முயற்சி தொடர்க!

    RépondreSupprimer
  2. சற்றே ஆர்வத்தோடு ஒரு முறை கவனத்துடன் அணுகினால் போதும். பின்னர் அந்த ரசனை தானே வரும்.

    ரசனை நிரம்பிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !

    RépondreSupprimer
  3. வணக்கம்,
    மனமார்ந்த வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களுக்கு நீண்ட வாழ்வினை கொடுத்து, உங்கள் தமிழ் பணி தொடர வேண்டுகிறேன்......
    அன்புடன்,
    மனிதன்

    RépondreSupprimer