பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 mai 2012

எண்ணப் பரிமாற்றம்




அன்புடையீர்,

வணக்கம். புத்தகம் என்பது ஒரு வரலாற்றுப் பெட்டகம். அது ஆண்டாண்டுக் கால நாகரிகத்தை, கலாச்சாரத்தை, வாழ்க்கை முறைகளைப் பதிப்பித்துத் தலைமுறை தலைமுறையாய் நிலைக்கச் செய்கிறது.

அது மட்டுமல்ல. அஃதோர் இன்பச் சுரங்கம்.எழுதப்பட்டது எதைப்பற்றியதாயினும் சுவையாக இருந்து விட்டால், மனத்தை இழுக்கும் வார்த்தை எனும் வண்ணத்தால் எண்ணத்தில் வானவில்லின் ஜாலம் காட்டும். பொருளும், மொழியழகும் வலையெனச் சூழ்ந்து நம்மை ஆட்கொள்ளும். காலங்கடந்த மோன நிலைக்கு வழி கோலும். இந்தக் கணணி யுகத்தில், விரல் நுனியில் எத்தனையோ இன்பங்கள் கொட்டிக் கிடந்த போதிலும் ஒரு பழுப்பேறிய பழைய நூலுக்கு உள்ள  கவர்ச்சியை அவை அடைய முடியாது.

கைகளில் தவழும் குழந்தை போன்று, மடியில் இருத்தி, ஊன்றிப் படித்து, அதில் ஆழ்ந்து அனுபவித்து, சற்றே மெய்ம் மறந்து கற்பனையில் அந்த இன்பத்தைப் பன்மடங்காக்கி ஊனுருகி, புதிதாய்க் கண் விழித்ததுபோல்  மீண்டும் கண்களை மேயவிட்டு, ஆங்கோர் புதுக் கருத்தினைக் கண்ணுற்று, வியப்பிலாழ்ந்து அணுஅணுவாய் தன்னை இழக்கும் சுகமிருக்கிறதே, அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்!

எழுதுபவன் எந்த நோக்கில் எதை எண்ணி எழுதினானோ, ஆனால் படிப்பவனோ அதை ஆயிரம் கோணத்தில், வெவ்வேறு பார்வையில், அந்தரங்க உணர்வில் அதன் சுவையைப் பன்மடங்காக்கி விடுகிறான்! அந்தச் சுவை படிப்பவனின் மொழி அறிவு, கற்பனைத் திறன், உள்ளப்பாங்கு பொருத்து வேறுபடும். அதனால்தான் ஒரே நூலின் ஒரே வார்த்தைக்கு ஆயிரம் பேர் ஆயிரம் அர்த்தத்தைக் கொடுக்க முடிகிறது. இந்தச் சுவையான விளையாட்டு  ஒரு போதை போல  அறிஞர்களை மிதக்க வைக்கிறது.

'கவிதை” என்பதோ இந்த இன்பத்தின் உச்சக் கட்டம். வார்த்தைகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டுக் கருத்தை முழுதுமாக வெளிப்படுத்தியோ மறைத்தோ அலங்கரித்த அல்லது அப்பட்டமான உண்மையைக் கற்பனையா நிசமா என மயங்கும் விதத்தில் மொழியழகின் துணைகொண்டு வெளிக்கொணரும் உன்னத உத்தியில் மனிதனை வானுலவவைக்கிறது.

இதில் ஒவ்வொரு வார்த்தையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில வேளைகளில் அந்த ஒரு வார்த்தை இல்லையேல் அக்கவிதையே உயிரற்றுப் போய்விடும். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்பதில் 'உதிரம்” என்பதை விடுத்துத் ‘துன்பம் பெருகுதடி’ ‘துயரம் சூழுதடி’ என எந்தச் சொல்லை உபயோகித்திருந்தாலும் இந்த அளவு நம் மனத்தை அது பாதிக்காது. ‘என் உயிர் நின்னதன்றோ’ என்னும் போது அங்கே காதலின் சரணாகதி நம்மையும் வீழ்த்துகிறது.

ஆனால் பெரும்பாலோருக்குக் கவிதை என்றால் ஓர் ஒதுக்கம்.  அதைப் புரிந்துகொள்ள முயலாமையே முக்கிய காரணம். சற்றே ஆர்வத்தோடு ஒரு முறை கவனத்துடன் அணுகினால் போதும். பின்னர் அந்த ரசனை தானே வரும்.இல்லாதவரைச்‘சதுரங்கம்’ மிரட்டும். பழகிய பின்னரோ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் சுவை ஊட்டும். கவிதையின்பமும் அத்தகையதே!


- திருமதி சிமோன்


இன்றைய அறிமுகம் - கவிக்குயில் சரோஜினி



ஆந்திர மாநிலத்தில் ஒரு வங்காள குடும்பத்தில் எட்டுக் குழந்தைகளில்  மூத்த மகளாகப் பிப்.13. 1879 பிறந்தார் சரோஜினி. இவரது தந்தை விஞானியாகவும்  கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா.தாய் கவிஞர் வரத  சுந்தரி.  இவருடைய  தந்தை தன் குடும்பத்தினர் ஆங்கிலேயர்கள் போல நாகரீகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது சுற்றத்தார் அனைவரும்  ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கண்டிப்புடன் இருந்தார். இது சரோஜினிக்குப் பிடிக்கவில்லை. முரண்டு பிடித்ததால் ஒரு நாள் முழுவதும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டார்.பின்னர் ஆங்கிலத்தில் பேச ஒப்புக்கொண்டார். வைராக்கியத்துடன் ஆங்கில மொழியைக் கற்றுக் கவிதைகள் எழுதும் அளவுக்குப்   புலமை பெற்றார்.  

12 வயதில் மெட்ரிக்  பரிட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். உருது, தெலுங்கு, பெர்சியம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச கற்றுக்கொண்டார். தனது  13 -ஆவது வயதில் 1300 வரிகளில் 'ஏரி மங்கை'  என்ற ஆங்கிலக் கவிதையை எழுதினார்.பதினாறு வயதில் லண்டனிலுள்ள கிங்க்ஸ் கல்லூரி மற்றும் கிர்டன் கல்லூரியில் தன் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் இருந்தபோது 2000 அடிகள் கொண்ட  நீண்ட கவிதை நாடகமும் கற்பனைக் கதை ஒன்றும் எழுதித் தம் ஆசிரியர்களிடம் காட்டினார். இலக்கணச் சுத்தமான அவருடைய படைப்புகளைக் கண்டு ஆச்சரியம்  கொண்ட அவர்கள், சரோஜினியின் கவிதை வடிக்கும் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினர். மிகுந்த கற்பனை வளமும், தாள லயமும், இசை வடிவமும் , காதல், பிரிவு, ஏக்கம், இறப்பு, வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகுக் கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும்கேசரி ஹிந்த்என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது. அலங்கார வார்த்தைகளும் நகைச்சுவையும் ஆனந்தச் சுவையும் பொங்கி வழிந்த அவருடைய கவிதைகளில் பெரும் நாட்டம் கொண்ட அவருடைய ஆசிரியர்   எட்மன்ட் கோஸ் மற்றும் ஆர்தர் சைமன்ஸ் இவர் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர் . அதன் பலனாக, 1905 -ஆம் ஆண்டில், முதல் தொகுப்பான  The Golden  Threshhold(தங்க வாசல்), 1912 இல்   The Bird of Time (காலப்பறவை), The Broken Wing என்ற தொகுப்புகள் மலர்ந்தன. இந்நூல்கள் ஆங்கில சமுதாயத்தினரையும் பெரிதும் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து மேலை நாட்டவர்களுக்கும் விளங்கச் செய்தவர் இவரே. கவிக்குயிலின் பாடல்களில், டெனிசன் , ஷெல்லி ஆகிய ஆங்கில கவிஞர்களின் தாக்கம் இருந்தது.

 17 வயதில் சரோஜினி அவர்கள் டாக்டர் முத்யாலா கோவிந்தராஜுலு அவர்களை சந்தித்து அவர் மீது காதல் கொண்டார்.19 வயதில் தனது படிப்பினை முடித்த பின்னர், ஜாதி விட்டு ஜாதி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாத காலக்கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என நான்கு குழந்தைகள் பிறந்தனர். 

1903 ஆம் ஆண்டு  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவாகளுக்கு அவர் நிகழ்த்திய உரையில் 'என் வாழ்கையில் பரந்த தேசிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க முயன்று வருகிறேன்.. . . .    . . . ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன், அங்கேயே    மணந்தேன் ஆனால் நான் வங்காளி அல்ல, நான் சென்னைக்காரி அல்ல, நான் ஒரு இந்தியப் பெண். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள். இந்த இரு வகுப்பினரையும் மற்ற பிற வகுப்பினரையும் என்னுடன் பிறந்த சோதரர்களாகவே  கருதுகிறேன், நேசிக்கிறேன், மதிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.      

1903 - 1917 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபாலகிருஷ்ண கோகலே , ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி. ராமசாமி ஐயர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார். கோகலே அவர்கள்தான் சரோஜினியின் மனத்தில் சுதந்திரத் தீயை மூட்டி , எழுச்சியூட்டும் பாடல்களை எழுத வற்புறுத்தினார். சரோஜினி  இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை, தேசியப் பற்று குறித்துப் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றினார். 1918 -இல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாநில அரசியல் மகாநாட்டிற்குத்    தலைமை வகித்தார். பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதிலும் அவர்கள் சமையலறையைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் கைம்பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினார்.    ஜூலை 1919 -இல் சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம்ருல் லீக்கின் தூதர் ஆனார். ஓராண்டிற்கு  பிறகு  இந்தியா திரும்பி மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.1924 -ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவருள்  சரோஜினி ஒருவராகத் திகழ்ந்தார். 1925  -ஆம் ஆண்டு அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  . இப்பதவிக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே.   1930 -இல் காந்தியும் இவரும் கைது செய்யப்பட்டுப் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பண்டிட் மாளவியா, காந்தி ஆகியோருடன் 1931 -ஆம் ஆண்டில் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார்.அக். 2, 1942  -இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.மகாத்மா அவர்கள்  இவரை 'மிக்கி மவுஸ்' என்று செல்லமாக அழைப்பாராம்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்திரப் பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில், ஒரு மாநிலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி சரோஜினி  நாயுடுதான்!   அங்குத்  தம் பணியைச் செவ்வனே செய்து பல சிக்கல்களைத் தீர்க்க அரசியல் தலைவர்களுக்குப் பல ஆலோசனைகளை  வழங்கினார்.
1948 -ஆம் ஆண்டு காந்தியடிகள் இன்னுயிர் நீத்தபோது, தாங்கொண்ணா துயரத்துடன்  அன்னாரது அஸ்தியை  திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.பின்னர் அம்மையாரின் உடல் நலத்திலும் நலிவு ஏற்பட ஆரம்பித்தது. மார்ச் மாதம் 02 -ஆம் நாள் 1949 -ஆம் ஆண்டு, லக்னோவில் அவர்தம் ஆழ்ந்த உறக்கம் துவங்கியது. 

பெண்குலத்திற்கு வழிகாட்டியாகவும் நல்லதொரு குடும்பத் தலைவியாகவும் தியாகச் சிந்தை கொண்டவராகவும் உலகச் சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்தவர் இவர்.   1961 -ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா, வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை The Feather of Dawn என்னும் தலைப்பில் வெளியிட்டார்.

தொகுப்பு: லூசியா லெபோ

கவிதைக் கடல் அமுதம்

                                                Dark Sea wallpaper


கவிதை என்பது உள்ளத்திலிருந்து மடை திறந்தாற்போல் வார்த்தைக் கோர்வையில் அழகு நடையில் வந்து விழும் ஓர் !அற்புதம்! உரை நடைக்கு இல்லாத கவர்ச்சி கவிதைக்கு உண்டு. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதும், மொழியின் அழகில் மயங்க வைப்பதும் கவிதை.

இது எழுதுபவர் எதைப் பற்றி, எந்த நோக்கத்தில்,எங்கே, எப்போது எழுதுகிறார் என்பதையும், யார் யாருக்காக எழுதுகிறார் என்பதையும் பொறுத்து வெற்றி அடையும். 

கவிதை எந்த  உருவத்தில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம்  உணர்த்தப்படுகிற முறையில் வெற்றிக் கனி பறிக்கும்.அறிவால் ஆய்ந்து அறிவதை விட ரசித்து மகிழும் பாங்குதான் இதில் முக்கியம். இதில் மொழியறிவு இன்றியமையாதது. கவிதையின் முழு சிறப்பையும் ஒரு சொல்லே அடக்கி இருப்பது கூட உண்டு.

இது காலங்காலமாய் இருந்து வரும் உணர்ச்சிப் பரிமாறல். கல்லிலும், தோலிலும் ஆதி மனிதர்கள் வெளியிட்டச் செய்திகள், பின்னர் ஓலைச் சுவடிகளில் மக்களை அடைந்தன. சகுந்தலை தாமரை இலையிலும், மாதவி தாழை இதழிலும் எழுதியதாக அறிகிறோம்.

கவிதையின் பொருள் அதற்கு உயிரளிக்காது. மாறாக  சொல்லப்படும் முறையே மதிப்பை அளிக்கும்.அதனால்தான் பாடும் பொருள் ஒன்றாகவே இருந்தாலும் பல விதங்களில் பாடப்பட்ட எல்லா பாடல்களுமே சிறப்பைப் பெறுகின்றன.இசை இதற்கு மெருகும், உயிரும் ஊட்டும்.

சங்க காலத்தில் காதலும், வீரமும் பாடுபொருளாக இருந்தது மாறி பிறகு  "வீடு" முதன்மை ஆனது. தமிழன் காமத்திலும் அதன் சார்பான  தரக்குறைவிலும்  ஈடுபட்டதன் விளைவாய் சான்றோர் இத்தகு மாற்றத்தை ஏற்படுத்தினர் என்போரும் உண்டு. மதமும், தத்துவ விசாரணையும், மோட்சமடைய  இவ்வுலக இன்பத்தைத்  துறக்க வேண்டுமென்ற  அறிவுரையும் வளர, பெண்மை ஓரங்கட்டப்பட்டு  'பெண் எனும் பேய்' என்ற அளவில்  பெண்கள் தாழ்த்தப்பட்டனர்.

நடுவே பல காப்பியங்கள் இயற்றப்பட்டன. தமிழ் நாவலும், சிறு கதைகளும்  ஆங்கில பாணியில் பெருகியது போல சமஸ்கிருதத்தைத் தழுவியே இவை பெரும்பாலும் உருவாகின.

 இடையே நாடு சுதந்திரம் அடைய வேண்டிய கட்டாயம் கவிஞர்களை தேசிய பாடல்கள் பக்கம் திருப்பியது.மெல்ல புரட்சிக் கருத்துக்களும், பெண் விடுதலையும்  பேசப்பட்டது.நாட்டுப்பற்று , மொழிப் பற்று  வலியுறுத்தப்பட்டது . பின்னர் மக்களின் அன்றாட பிரச்சனைகளும், தேவைகளும், ஆசைகளும், ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் கூட கவிதையின்  பொருளாயின .

நாட்டுப்புற க்  கவிதைகள் தனியே பொது மக்களால்  வாய்வழி  வளர்ந்து வந்தன ... தற்போது ஒருசிலர் அவற்றுக்கும்  எழுத் து வடிவம் அளித்து  நிலைப்படுத்துகிறார்கள். 

இதேபோலபாடும்வகையும்மாறுதலுக்குஉள்ளானது.'மாத்திரை,அசை,சீர்,
தளை  ,அடி' என்றிருந்தது மாறி வசன கவிதைகளும், புதுக் கவிதை வடிவமும் தோன்றின. சொல் அலங்காரத்தால் முன்பு வசனம் கூட 'கவிதை' போன்று இருந்தது. தற்போது சொல் சிக்கனத்தால் வாசகன் தன்  முயற்சியால் யோசித்து சுவைக்க இடம் தரப்படுகிறது. இது சில வேளைகளில் வாசகன் வரம்புக்கு உட்படாமலே போகவும் வாய்ப்பளித்து விடுகிறது.

கற்பனைப்பாணி பெரும்பாலும் மறைந்து விட்டது.உவமைகளின்றி நேரிடையாக  செய்திகள் சொல்லப்படுகின்றன.நகைச் சுவையாகவோ அன்றி வலி யைப் பிரதிபலிப்பதாகவோ உணர்ச்சிகள் வெளிப்படுத்தப் படுகின்றன.

இன்னும் வருங்காலத்தில், கவிதை நயம், சொல் மயக்கம் , உவமை  அழகு  இவை முற்றிலும் மறைந்து போகலாம். இந்த அவசர யுகத்தில்  அமைதியான  மன நிலையில்  கவிதைகளை ரசிக்க  ஆளின்றி போகலாம். ஆனால்  சுற்றுப் புறச் சூழல் மாசுறுவதால் என்ன கேடு விளையுமோ அதே அளவு  இழப்பு கவிதைகள் மறைவதால் மனித குலத்துக்கு நிச்சயம் உண்டு !

திருமதி சிமோன் 




கவிதை ஊற்று



கவிஞர்கள் தங்கள் உணர்வுகளை,எண்ணங்களை மட்டுமே கவிதைகள் மூலம்வெளிப்படுத்துவதில்லை.சமூகநலன் கருதிபலவகை வாழும் முறைகளையும்,மனித இயல்புகளையும், அதில் மாற்றங்களையும், உயர்ந்த நோக்கங்களையும்பொறுப்புணர்வோடு கவிதையாக்குகின்றனர். இன்னும் சொல்லப்போனால்ஒரு உண்மைக் கவிஞனின் பரந்த மனம் மனித இனத்தின் தரத்தைஉயர்த்துவதையே குறிக்கோள் எனக்கொள்ளும்.காலம் மாறினும்,கவிதையின்வடிவமும் சொல்லும் முறையும் மாறினும் நோக்கம் மாறுவதில்லை. கீழ்கண்ட கவிதைகள் இக்கூற்றுக்கு சான்றாகும்:

மனைக்குவிளக்கம்மடவார் -மடவார் 
தமக்குத்தகைசால்புதல்வர் -மனக்கினிய 
காதல்புதல்வர்க்குக்கல்வியே -கல்விக்கும்
ஓதில்புகழ்சால்உணர்வு ! (சங்கஇலக்கியம் -நான்மணிக்கடிகை )

மக்களொடுமகிழ்ந்துமனையறங்காத்து 
மிக்ககாமத்துவேட்கைதீர்ந்துழித் 
தலைவனும்தலைவியும்தம்பதிநீங்கித்
தொலைவில்சுற்றெமபடு துறவரங்காப்ப -(நம்பியகப்பொருள்விளக்கம்)

என்னைநன்றாய்இறைவன்படைத்தது 
தன்னைநன்றாய்த்தமிழ்செயுமாறே!-திருமூலர் 

வேண்டுதல்வேண் டாமைஇலானடிசேர்ந்தார்க்கு 
யாண்டும்இடும்பைஇல.-குறள் 

அறவோர்க்களித்தலும்,அந்தணர்ஓம்பலும் 
துறவோர்க் கெதிர்தலும்தொல்லோர்சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் ............-(சிலப்பதிகாரம்-இளங்கோவடிகள் )

இல்லாள்அகத்திருக்கஇல்லாததொன்றில்லை 
இல்லாளும்இல்லாளே யாமாயின் -இல்லாள் 
வலிகிடந்த மாற்றம்உரைக்குமேல்அவ்வில் 
புலிகிடந்ததூறாய்விடும்-ஔவை 

பெற்றநலத்தையும்பிறந்த பொன்னாடும் 
நற்ற வானிலும்நனி சிறந்தனவே -பாரதி 

உணர்வெனும் கனலிடைஅயர்வினைஎரிப்போம் 
'ஒருபொருள்தனி'எனும்மனிதரைச்சிரிப்போம் 
இயல் பொருள்பயன்தர மறுத்திடில்பசிப்போம் 
ஈவதுண்டாம்எனில்அனைவரும்புசிப்போம்.-பாரதிதாசன்  

நினைத்தவுடன் அத்தனையும் நேரில்கிடைக்குமெனில் 
முயற்சிஎனும்ஒன்றைநீமுழுதும்மறந்திருப்பாய்!..........
ஞாலத்தில்நீஒருவன்நடத்துஉந்தன்நாடகத்தை 
காலத்தின்சிந்தனையில்கனவெனவோ,நனவெனவோ?-கண்ணதாசன் 

ஊக்குவிக்க ஆ ளிருந்தால்ஊக்குவிப்பவன்கூட 
தேக்குவிப்பான் -வாலி 

வாழ்க்கைபூட்டிக்கிடக்கிறது .
சிரிப்புச்சத்தம்கேட்கையில் 
அதுதிறந்துகொள்கிறது.
பகலில்சிரிக்காதவர்எல்லோருக்கும் 
மரணம்ஒவ்வொருசாயுங்காலமும் 
படுக்கைத்தட்டிப்போடுகிறது.-வைரமுத்து 

ஒருஉயிர்துடிக்கும்போது 
யாரும்கவனிக்கமாட்டார்கள் 
அதுநின்றபின்எல்லோரும்துடிப்பார்கள் -யாரோ 

தொகுப்பு:திருமதிசிமோன்  



உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை


உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை
(World Tamil Poets Organization)





பேரவையின் தோற்றம்

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 6-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற பொழுது 18-11-1987 அன்று கோலாலம்பூர் மலேசியா பல்கலைக்கழகத் திறந்த புல்வெளித்திடலில், பலநாட்டுத் தமிழ் அறிஞர்களும், கவிஞர்களும், உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் கவிமாமனி சாத்திரி வெங்கட்டராமன் முன்னிலையில் கூடி "உலகத் தமிழ் கவிஞர் பேரவை"யை உருவாக்கினர்.

அமைப்பு


இப் பேரவை தமிழ் கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான உலகலாவிய மாபெரும் அமைப்பாகும். இது உலகம் முழுவதுமுள்ள 72 நாடுகளில் தற்போது இயங்கி வருகிறது. அந்தந்த நாட்டிற்கும் அமைப்பாளர்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு மாநில அமைப்பாளர்களும், தமிழ்நாட்டில் தமிழ் மாநில செயலாளரும், மாவட்டங்களுக்கு மாவட்ட அமைப்பாளர்களும் இருந்து இப் பேரவையை இயக்கி வருகின்றனர்.


ஆரம்ப காலத்தில் உலக அமைப்பு முழுமைக்கும் தலைவராக உவமைக் கவிஞர் சுரதா அவர்களும், பொதுச்செயலராக தமிழ் நெப்போலியன் கவிமாமணி சாத்திரி வெங்கட்டராமன் அவர்களும், தமிழ் மாநில செயலாளராக சிந்தனைக் கவிஞர் கவிமாமணி பனப்பாக்கம் கு.சீத்தா அவர்களும் இருந்து இயக்கி வந்தனர்.

தற்போது, உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் மறைவிற்குப் பின் பேரவையின் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்பட்டு, பேரவையின் நிறுவனராக சுரதா அவர்களும், உலக அமைப்பின் தலைவராக முன்னாள் தமிழக அரசவைக் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியரும், தமிழக சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான திரு கவிஞர்.முத்துலிங்கம் அவர்களும், பொதுச்செயலாளராக பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற சிந்தனைக் கவிஞர் கவிமாமணி பனப்பாக்கம் கு.சீத்தா அவர்களும், அமைப்புச் செயலாளராக திரு. தமிழ் சக்தி அவர்களும் இருந்து இப் பேரவையை இயக்கி வருகின்றனர்.

இப் பேரவைக்கு உலகமுழுவதும் உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதும் சேர்ந்த வண்ணம் உள்ளனர்
 உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை தங்களை அன்புடன் வரவேற்கின்றது!

தமிழ் ஆர்வளர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிடவும், தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இணையத்தில் பங்கு பெறவும் புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நன்றி: இணையம்