பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 avril 2012

எண்ணப் பரிமாற்றம்



அன்புடையீர்,

வணக்கம். காலங் காலமாய் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டு வந்த மனித இனம், தற்போது தன்னையும், தான் வாழுகின்ற பூமியையும் காப்பாற்றுவது எப்படி என்று கவலைப்படும் நாள் வந்து விட்டது ! 

சுய நலத்தின் உச்சத்தில், தூய்மையைப் பற்றிச் சிறிதும் எண்ணாது வாழ்ந்து வந்த நாம், நமக்காகவேனும் சுற்றுச் சூழலைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்காளாகி விட்டோம்.

நமது வீட்டைக் கூட்டி, பக்கத்து வீட்டருகே குப்பையை திரட்டி வைத்த வழக்கம் இன்னும் போகவில்லை.(வளர்ந்த நாடுகளும் தங்கள் கழிவுகளை ஏதோ ஒரு போர்வையில் வளரும் நாடுகள் தலையில் கொட்டுகின்றன) சுகாதாரத்தைப் பேணுவது தினம் குளித்து சுத்தமான உடை உடுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை. நாம் போகுமிடமெல்லாம் சுத்தம் நம்மைத் தொடர வேண்டும். நம் ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம் அங்கேதான் இருக்கிறது.

பெருகி வரும் நோய்க்கிருமிகள் இப்போது சாதாரண மருந்துகளுக்கெல்லாம் பயந்து ஓடுவதில்லை ! புதுப் புது வியாதிகள். அவற்றோடு போட்டியிட இயலாமல் கூட்டம் கூட்டமாய் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

கடவுளுக்கு அடுத்து மருத்துவரை உயிர் கொடுக்கும் தெய்வமாக நினைத்த காலம் மலையேறி விட்டது.பொது மக்களுக்கு, நோய்-மருந்து பற்றிய அறிவு அதிகப்பட்டு விட்டது, எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து விட்டதனால் மருத்துவர் பால் மதிப்பு போய்விட்டது என்று முழுக்க முழுக்கச் சொல்வதற்கில்லை!என்னதான் வைத்திய வசதிகள் முன்னேறி, பெருகி இருந்த போதிலும் பெரும்பாலான மருத்துவர்களின் குறிக்கோள் பணமும், புகழுமாக மாறி விட்டது வருத்தத்திற் குரியதே! புனித சேவை எனபது மாறி, வருமானத்துக்கு வழிவகுக்கும் தொழிலாகி விட்டது மருத்துவம்.

ஒரு மருத்துவத் தம்பதி, தங்கள் பதினைந்து வயதுச் சிறுவன், உலகிலேயே மிகக் குறைந்த வயது சர்ஜென் என்றுகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென அவனைத் தங்கள் மருத்துவமனையில் சிசேரியன் செய்ய வைத்தார்கள் என்றால், புகழ் போதை எந்த அளவு போக வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அறுவை சிகிச்சையின்போது கத்தரிக் கோலையோ, பஞ்சையோ உடலுக்குள் வைத்துவிட்ட செய்திகள் ஏராளம். தவறான மருந்தைக் கொடுத்து, நோயாளியின் வேதனையைக் குறைப்பதற்குப் பதிலாக, மற்றுமொரு வியாதியையோ அல்லது ஆபத்தையோ வரவழைக்கும் மருத்துவர்களை எங்கும் சந்திக்கிறோம்.

நோயாளியின் சிரமங்களைக் கேட்டறிந்து, தனிப்பட்ட அவரது பழக்க வழக்கங்கள், பரம்பரை, அவருடைய சூழல் எல்லவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அளிக்கும் வைத்தியமே பலன் அளிக்கும். இப்போதைய மருத்துவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை. வரிசையாக அமர்ந்திருப்போரின் பட்டியலில், அந்த நேரத்தில் ஊரில் பரவியிருக்கும் கிருமியால் வந்திருக்கும் நோயைச் சார்ந்த அறிகுறிகள் தென்பட்டால், அதற்கு கணணி காட்டும் மருந்துகளை எழுதிக் கொடுப்போரே அதிகம். நோய் சடுதியில் தீர்வதும், நீடிப்பதும், வியாதியே வேறாக இருப்பதும் அவரவர் தலையெழுத்தைப் பொறுத்தது !

இந்தப் பிரச்சனைகளிலெல்லாம் மாட்டிக்கொள்ளாமல் நாட்களை நல்ல முறையில் நடமாட்டத்தோடு கழிக்க வேண்டுமென்றால் வருமுன் காப்பதே நல்லது. அதற்கு சுத்தமான பழக்கங்களும், சுகாதாரமான சூழ்நிலையும், எளிய உடற்பயிற்சியும், கொஞ்சமாக இருந்தாலும் சத்தான உணவும், தூய மனமும் இருந்தால் போதும். பரம்பரை நோய்களும், நம்மை மீறி வரும் வியாதிகளும் கூட ஓரளவே நம்மைப் பாதிக்கும். இதற்கும் மேல் இறைவன் சோதித்தே ஆக வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், அதை மாற்ற எந்த மனிதனுக்கும் சக்தி இல்லை !

திருமதி சிமோன்




Aucun commentaire:

Enregistrer un commentaire