பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 27 mars 2012

எண்ணப் பரிமாற்றம்



 அன்புடையீர்,

உலக வாழ்க்கையை நினைத்தால் பயமாகவும், கவலையாகவும் உள்ளது. நமக்காக அல்ல. நமது சந்ததியருக்காக! எங்கு  நோக்கினும், அமைதி இன்மையும், வன்முறையும் ஆட்சி புரிகின்றன. நாடுகளுக்கு இடையே பகையும் போரும் இருந்தது போக வீடுகளுக்கிடையே போராட்டம் வெடிக்கிறது. விட்டுக் கொடுத்தலும், தியாக மனப்பான்மையும் அரிதாகிவிட்டன. உணர்வுகளை மதிப்பாரில்லை. 

வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அதற்காக உழைப்பது கடமை. ஆனால் பிறர் பொருளைக் கவர்ந்தேனும் தான் நினைத்ததை அடைய விழைவது எந்த விதத்தில் நியாயம்? தனக்குப் பிடிக்காததை காரணக் காரியத்தோடு விளக்குவது உரிமை. தான் விரும்பாததை அழிப்பது என்ன நியாயம்? தவறு நேர்ந்தால் தட்டிக் கேட்பது நேர்மை. தவறு செய்தவர்களையே இருந்த இடம் தெரியாமல் செய்வது என்ன நீதி?

தன் சுகத்திற்காக பிறர் நலனைக் கெடுக்கத் துணியும் இந்த அராஜகம் எப்படி முளை விட்டது? துடிக்க வைத்துப் பார்க்கும் அரக்க மனம் எப்படி கிளை பரப்பியது? இன்று சமுதாயத்தைப் புரட்டிப்போடும் சுயநலம் எப்படி வேருன்றியது?

மனிதன் தன் அறிவையும், ஆற்றலையும் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவரை, எல்லாம் ஒழுங்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.தன்னிறைவு ஏற்பட்டவுடன், கிடைக்கும் நேரத்தையும்,  மற்ற வளங்களையும் ஆன்ம வலிமை கெடாதவகையில் உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். அங்கே தான் பெருந்தவறு செய்துவிட்டோம். உல்லாச வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெருக்கி, அதை அடைவதை உலக சாதனையாக பெரிது படுத்தி விட்டோம்.

இளைஞர்களின் மனம் உலக நாட்டங்களில் மூழ்கவும், அதிலேயே இன்பங் காணவும் அடித்தளம் அமைத்துவிட்டோம். சிறிது சிறிதாக இந்நிலை வளர்ந்து இன்று மாற்ற முடியாத எல்லைக்கு வந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.


வெளிவரும் புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். மொழியின் தரம் பற்றிப் பேச வேண்டாம். எத்தனை அறிவார்ந்த நூல்கள் வெளிவருகின்றன? எத்தனை மக்களுக்கு அறிவுரை கூறுகிறோம் என்ற போர்வையில் வெறும் வார்த்தை ஜாலங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன? சாமானியரிடையே வட்டமிடும் வார, மாத இதழ்களை எடுத்துக் கொண்டால் எத்தனை உபயோகமுள்ள, தரமான செய்திகளை அவை தாங்கி வருகின்றன?


சினிமா,சின்னத்திரை பற்றி பேசவே தேவை இல்லை. காதலும், பிரம்மாண்டமும் சண்டைக் காட்சிகளும், தொழில் நுட்பங்களும் போதும் திரைப்படத்திற்கு! சின்னத் திரையோ சினிமா வில்லன்களை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வீட்டிற்குள் இருப்பவர்களை வில்லன்-வில்லிகளாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் எத்தனை இதயங்களில் விஷ விதைத் தூவப்பட்டிருக்கிறது என்று யோசிப்பாரில்லை!


குழந்தைகளுக்கான வீடியோ விளையாட்டுக்கள் எப்படியெல்லாம் எதிரிலிருப்பவர்களை அழிக்கலாம் என்று கற்றுக்கொடுக்கிறது. இன்றைய கார்ட்டூன் கூட வன்முறையையே சிரிப்பாக மாற்றிக்காட்டுகிறது. பெரியவர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து இவற்றை விளையாடுவதில் பெருமிதம் கொள்கின்றனர். வேகமாக இயக்குவதும், அந்த நேரத்தில் ஏற்படும் பரபரப்பும் நரம்புக்குக் கேடு என்று ஏதோ ஒரு அறிவியல் கட்டுரையில் வெளி வருவது யார் கவனத்தையும் கவராமல் போகிறது.

இதைவிட, இத்தகு கற்பனை உலக நிகழ்வுகளும், அதில் அடையும் வெற்றியும்  இன்றையத் தலைமுறையை சாதாரண வாழ்க்கையை ரசிக்க முடியாது செய்து விடும் என்பது எத்தனை பயங்கரமானது? ஒரு கார் ரேஸ் பற்றிய விளையாட்டையே எடுத்துக்கொள்வோம்.  எவ்வளவு வேகம் வேண்டுமானாலும் போகலாம், எத்தனைப் பேரை வேண்டுமானாலும் இடித்துவிட்டுப் போகலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகலாம் என்று நூறு முறை விளையாடிவிட்டு, நிஜ வாழ்க்கையில் ,ஊருக்குள் இருபது கிலோ மீட்டர் வேகத்தில், குறுக்கிடும் பத்துப் பேருடைய தடங்கலுக்கிடையே வண்டி ஓட்ட வேண்டும் என்றால்,எந்த இளம் ரத்தம் அதை வரவேற்கும்? விபத்துகள் அதிகமாகி விட்டது என்று நாம் புலம்புகிறோம்!

 மென்மையான நுண்ணுணர்வுகளும் மெல்ல மறைந்து இல்லற இன்பமும் நிறைவடையச் செய்ய இயலாது போய்விடும் என்று சில விஞ்ஞானிகள் உரைப்பது உண்மையாகிவிடுமோ என்பதையே இன்றைய காரணம் அற்ற  விவாக ரத்துகள் அறிவிக்கின்றன. ஊழிக்காலம் என்பது இந்த உருவில்தான் இனி வருமோ என்னவோ! மனித குலத்தை இறைவன் மட்டுமே கப்பாற்ற முடியும் போலிருக்கிறது !

திருமதி சிமோன்