பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 février 2012

கர்னாடக இசை

     

மனிதன் என்றுமே அன்றாடத் தேவைகளுக்காக போராடிக்கொண்டிருந்தாலும் , அவைகளின் நிறைவேற்றத்தில் மட்டுமே திருப்தி கொள்பவன் இல்லை! அவன் ஆன்ம நிறைவுக்கானத் தேடல் ஒரு புறம் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும், அது நிறைவேறும் வரை!  அந்த உந்துதல், மனம் அமைதி காணும் இடத்தில் முடிவு பெறும். அதற்கான முதலும் முடிவுமாக பிறந்தவையே எல்லாக் கலைகளும்! அவற்றில் ஊனுருக்கி, உள்ளம் உருக்கும் கர்னாடக இசை பற்றி:

 முதலில் தமிழ் நாட்டில் பெயரின்றி உலவி வந்த இசை வடிவம், மகாராஷ்டிர மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்தபோது 'தென்னிந்திய இசை' என்று அங்கீகரிக்கப்பட்டபோதும், "கர்நாடக இசை" என்றே வழங்கப்பட்டது. வளமான, பலவித நுணுக்கங்களைக் கொண்ட, உலக மிகப் பழமையான பாரம்பரிய இசை இது. தென்னிந்தியர்களைப் பொருத்தமட்டில் இது வெறும் ஒரு மகிழ்விக்கும் கலை அல்ல. மனித உணர்வுகளைச் சமனப்படுத்தி, இறைவனை அடையும் மார்க்கத்தினை காட்டும் உயரிய வழி!

சாம வேத காலத்தில் இதன் அடிப்படை உருக்கொண்டதாகக் கூறுகிறார்கள். ரிக் வேத சமயத்தில் கோவிலில் பாடும் சங்கீதமாக ஞான உயர்வடைந்தது. யஜுர் வேதச் சூழலில் 3  முதல் 7  இசைக் குறிப்புகளைக் கொண்டு வீணையின் நாதமும் ஒரு சேர நிலைத்தது!

16  ஆம் நூற்றாண்டில் இந்துஸ்தானி இசையும், பெர்சியன், முஸ்லிம் இசைகளும் பரவியபோது, விஜய நகரப் பேரரசர்  இதை தஞ்சாவூரில் வளர்த்தார். கீர்த்தனை எனப்படும் பாடல்கள் இது முதல் உருவாகின.  18  ஆம் நூற்றாண்டில் மைசூர், திருவனந்தபுர மன்னர்களும் இந்தப் புனித இசையைப் பராமரித்தனர். 19  ஆம் நூற்றாண்டிலிருந்து "சபா" என அழைக்கப்படும் குழு சென்னையில் கர்னாடக இசையைப் பாதுகாத்து வருகிறது ! "கர்னாடக இசை விழா" ஒவ்வொரு வருடமும் மார்கழி-தை மாதத்தில் சென்னையில் நடைபெறுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இசை விழா கொண்டாடப்படுகிறது.

கர்னாடக இசை,சுருதி-சுவரம்(ச,ரி,க,ம,ப,த,நி)-ராகம்-தாளம் இவற்றின் கலவையாக உள்ளது. எளிதாகக் கண்டுபிடிக்கக்கூடிய தத்துவ எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டது.

சப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்

ஸ் - ஸட்ஜம் - குரல்
ரி - ரிஷபம் - உழை
க - காந்தாரம் - கைகிள்ளை
ம - மத்தியமம் - துத்தம்
ப - பஞ்ஜமம் - இளி
த - தைவதம் - விளரி
நி - நிஷாதம் - தாரம்

ஸ, ப -- ப்ருக்ருதி சுவரங்கள் (மாறுதல் இல்லாதது)
ரி, க, ம, த, நி -- விக்ருதி சுவரங்கள் (மாறுதல் உள்ளது)

ஸ -- ஸட்ஜம்
ரி1 -- சுத்த ரிஷபம்
ரி2 -- சதுச்ருதி ரிஷபம்
க1 -- சுத்த காந்தாரம்
க2 -- அந்தர காந்தாரம்
ம1 -- சுத்த மத்தியமம்
ம2 -- ப்ரதி மத்தியமம்
ப -- பஞ்ஜமம்
த1 -- சுத்த தைவதம்
த2 -- சதுச்ருதி தைவதம்
நி1 -- கைசிக நிஷாதம்
நி2 -- காகலி நிஷாதம்

சப்த சுவரங்களும் மிருகங்களின் ஒலியும்.....

ஸ -- மயிலின் ஒலி
ரி -- மாட்டின் ஒலி
க -- ஆட்டின் ஒலி
ம -- சிரவுஞ்சத்தின் ஒலி
ப -- குயிலின் ஒலி
த -- குதிரையின் ஒலி
நி -- யானையின் ஒலி

கட்டமைப்பு: வர்ணம்,கிருதி (பல்லவி, அனுபல்லவி, சரணம்), கீதம், சுவரஜதி, ராகம், தானம், பல்லவி, தில்லானா.


வாத்தியக் கருவிகள்: வீணை, வயலின், சித்திர வீணா, நாதஸ்வரம், மிருதங்கம், தம்புரா, புல்லாங்குழல், கதம், கஞ்சீரா, மோர்சிங், ருத்திர வீணா, மண்டலின், தவில், சுருதிப் பெட்டி.


முன்னரே முடிவு செய்யப்படாத கணநேர நிகழ்வுகள் இதில் உண்டு. ராக ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், தனி ஆவர்த்தனம் போன்றவை சுவையைக் கூட்டுகின்றன.

இசை அமைப்பாளர்கள்: தியாகராஜர் (தெலுங்கு) 1759  - 1847
                                                   முத்துஸ்வாமி தீட்சதர்(சமஸ்க்ரிதம்) 1776 -1827
                                                    சியாமா சாஸ்திரி 1762 -1827

"Trinity of Carnatic Music " சார்பில் அருணாச்சலக் கவி முதல் கோபாலக்ருஷ்ண பாரதி, சுப்ரமணிய பாரதி, பாபநாசம் சிவன் (தமிழ்-சமஸ்கிருதம்) வரை பலர் ஈடுபட்டுள்ளனர்.


தனக்கெனத் தனி கௌரவத்தையும், இடத்தையும் பெற்றுள்ள கர்னாடக இசை சினிமாவிலும் ஊடுருவி பாடல்கள் தரத்தை உயர்த்தியுள்ளது.


திருமதி சிமோன்