பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 13 janvier 2012

பிரெஞ்சு நன்னெறிக் கதைகள்


                                              




நகரத்து எலியும், வயல் எலியும்: La Fontaine

நகரத்து எலி ஒன்று வயல் எலி ஒன்றைச் சந்தித்தது. தான் இருக்கும் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தது. அந்த வீட்டு மனிதர்கள் விருந்தை முடித்துப் போன பிறகு இரண்டு எலிகளும் மேசை மேல் சிந்தியிருந்தவற்றைத் தின்றன. விருந்து மிகப் பிரமாதமாக இருந்தது. ஆனால், சாப்பிடும் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அறை வாசலில் சத்தம் கேட்டது. உடனே நகரத்து எலி மறைவிடம் தேடி ஓடியது. வயல் எலி அதைப் பின் தொடர்ந்தது. 

உள்ளே வந்த மனிதன் வெளியேறிய பிறகு, அங்கே அமைதி நிலவியது. "வா, நாம் சாப்பிட்டு முடிக்கலாம்" என்றது வீட்டு எலி. "போதும்! நாளை நீ என் இருப்பிடத்திற்கு வா! இதைப் போன்ற  விருந்து என்னால் தர முடியாது. ஆனால் இடையூறு இன்றி அமைதியாகச் சாப்பிடலாம். அச்சமும், மகிழ்ச்சியும் உள்ளதைவிட நான் எளிமையும், நிறைவும் உள்ளதையே விரும்புகிறேன்!"
என்று சொல்லிவிட்டுச்  சென்றது வயல் எலி!




பட்டம் : Jean Lue Moreau


பட்டம் ஒன்று வானத்தில் பறந்து கொண்டிருந்தது. மிக உயரத்தில் பறந்ததால் அதற்கு செருக்கு உண்டாயிற்று. கீழே பூக்களின் மீது பறந்துகொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து, 'இத்தனைச் சிறிதாக, தாழப் பறந்து கொண்டிருக்கிறாயே, என்னைப் பார்த்தாயா, நான் வானத்தைத் தொடுமளவு மேலே பறக்கிறேன்' என்று பெருமை பேசியது.

பட்டாம்பூச்சி பதிலுக்கு,"நான் என் விருப்பப்படி பறக்கிறேன். நீயோ அடிமையாய் நூலால் கட்டப்பட்டு ஒரு சிறுவனின் விருப்பத்திற்கு ஆடுகிறாய்" என்றது.


வெள்ளாடும், ஓநாயும் : Jean Jacques Boisard

புல்வெளி அருகிருந்த பாறை மீது ஒரு வெள்ளாடு விளையாடியபடி அங்கிருந்த புற்களை மேய்ந்தது. இரை தேடி வந்த ஓநாய் ஒன்று அதை உண்ண விரும்பி, "ஏராளமாக கீழே உள்ள புல்லை விட்டு ஏன்  அங்கே மேய்கிறாய்?" என்றது.   "அது எனக்கும் தெரியும். உனக்குப் பாறைமேல் ஏறத் தெரிந்தால், நீ இவ்விதம் சொல்ல மாட்டாய்" என்றது வெள்ளாடு!


முட்செடி : Bressier


தோட்டத்து முட்செடி ஒன்றில் காயப்பட்ட சிறுவன் ஒருவன் தந்தையிடம் முறையிட்டான்: அழகான செடியில் முள் இருக்க வேண்டுமா? அது எதற்கு உதவுகிறது?"

தந்தை கூறினார்: "மகனே, நல்லவரிடையே கெட்டவர்களும் உள்ளனர். கெட்டவர்களுடன் சேரக் கூடாது. முன் எச்சரிக்கை வேண்டும். இதை நீ அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அது இருக்கிறது".


மனச் சான்றின் முதல் விழிப்பு: A. Theuriet


எனக்கு அப்போது நான்கு வயது. எதிர் வீட்டு முற்றத்தில் நான்கு நாய்க்குட்டிகள் வைக்கோலின் மேல் படுத்திருந்தன. அங்கே  அவற்றின் தாய் இல்லை. அருகில் இருந்த செய்குளத்தில் நாய்க்குட்டிகள் நீந்துவதைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். அவற்றைத் தூக்கி அதில் போட்டேன். ஆனால் அவை நீந்தவில்லை. உயிருக்குப் போராடி தத்தளித்தன.

என் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. நாய்களைக் காப்பாற்ற முயன்றேன். முடியவில்லை. அச்சத்தால் அப்பால் ஓடினேன். அவை காப்பாற்றப்பட்டனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் மனச்சான்றின் குரல் அன்றுதான் முதன் முதலாக என்னுள் ஒலித்தது.


வானம்பாடிகள் : X. Marmier


அவன் பள்ளிக்குப் போக வீட்டை விட்டு வெளியே வந்தான். வானத்தில் பறந்து கொண்டிருந்த வானம்பாடிகளைப் பார்த்து, "என்ன கவலையில்லாத வாழ்க்கை?" என்று சொன்னான். இதைக் கேட்ட பெரியவர் ஒருவர் அவனை நெருங்கி, "அவை பூச்சிகளையும், ஈக்களையும் பிடித்து தங்கள் குஞ்சுகளுக்கு கொண்டு போய்க் கொடுக்கின்றன. மகிழ்ச்சியாகப் பறந்தவண்ணம் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. நீ நினைப்பது போல அவை வீணே திரியவில்லை" என்றார். புரிந்துகொண்ட சிறுவன் பள்ளிக்கு ஓடினான்.

க. சச்சிதானந்தம்.

(இவர் புதுச்சேரியில் பிரஞ்சு அரசினரால் நடத்தப்படும் கல்லூரியில் தமிழ்ப்
 பேராசிரியராகப் பணியாற்றியவர். பிரஞ்சு - தமிழ் ஆய்வு மாமணி, சிறுவர் மனச் செம்மல், மொழியாக்கச் செல்வர் (பாரிசு) போன்ற பட்டங்களைப் பெற்றவர். பிரஞ்சு மொழிக் கதைகளை எளிய நடையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். பல நாட்டுக் கதைகளை பிரஞ்சு மொழியிலிருந்து தமிழாகியுள்ளார். பாரதியின் கனவை இம்முறையில் நனவாக்கியவர்.)