பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். இன்று பொது அறிவு என்பது ஒரு மனிதனின் இன்றியமையாத தேவை ஆகிவிடுகிறது. அண்டை அயலாருடன் அன்போடு ஒத்து வாழ்வதே,மனித நேயமும்  இரக்கமும் கொண்டு விட்டுக்கொடுத்து அனைவரும்
 இன்புறுவதே இலட்சியம் என்பது போய்,  போட்டி போட்டுக்கொண்டு  பிறரை அழித்தேனும் முன்னேறுவதும், சகிப்பற்றத் தன்மையும், இதயத்தில் கனிவு சுரக்காத வறட்டு கௌரவமும் பரவிக் கிடக்கும் இந்நாட்களில் விரல் நுனியில் உலகச் செய்திகளை அடுக்கி வைத்திருப்போர் பிறரை மலைக்கச் செய்கின்றனர்.

ஒரு சாமானியனுக்குக் கிட்டாத விபரங்களை, இந்தக் கணணி யுகத்தில் 
திரட்டுவதோ  அல்லது    அவற்றை நினைவில் நிறுத்தி சொல்வதோ மிகப் பெரியக் காரியமல்ல! ஆனால் அவை மானுட நோக்கில் பயன் தருவதாய்  நடை முறைக்கு ஒத்து வருவதாய் இருக்க வேண்டும்.  சொல்பவர் தான் சொல்வதைச செய்பவராய் இருக்க வேண்டும். ஏனெனில் பொது வாழ்வில் பிறரை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் மகத்தானப் பணியில் அவர்கள் இருக்கிறார்கள்.

திரு ஈ.வே.ரா. ஒரு சிறுவனுக்கு இனிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது என்று அறிவுரை சொல்லுமுன், தான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பிறகு சொன்னதாக அறிகிறோம்.  திரு தமிழருவி மணியம் கடந்த கம்பன் விழாவில் "பார்த்து, படித்து அறிவதால்" மட்டுமே வாழ்வது வாழ்வல்ல - உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டாலும் கண் அழுவது போல பிறர் துன்பம் கண்டு உருகும் மனம் பெற வேண்டும் என்ற அரிய கருத்தைக் கூறினார்கள்.

இன்றைய வன்முறைக்கும், அமைதி இல்லா வாழ்க்கைக்கும் பொருளாதாரம், மதம் தாண்டிய இந்த வறண்ட மனம்தான் காரணமாகிறது. காந்தி எல்லார் இதயத்திலும் நிலை பெற்றது, அவர் வக்கீல் என்பதாலோ அல்லது வெளிநாடுகளில் வசித்து அனுபவம் பெற்றவர் என்பதாலோ அல்ல. " ஒரு இந்திய ஏழையின் உடல் முழுதாக மூடப்படும் நாள் வரை எனக்கு அவனைப் போல வாழ்வதே தர்மம்" என்று முடிவெடுத்த அவரது ஆண்மையும், அதற்கு அடிப்படையான அவர் மன விசாலமுமே அவரை மகாத்மா ஆக்கியது.

தற்போதைய உலகில் முன்னேற அறிவைப் பெருக்குவது அவசியம். அதைவிட, மனிதப் பண்பாட்டைக் காக்க, இன்னும் சொல்லப்போனால் "மனிதனாக" வாழ அன்பும், அறனும் அதைவிட அவசியம்.

திருமதி சிமோன்