பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 11 septembre 2011

கவிதை இன்பம்

செந்தமிழின் இனிமையை கவிதையில் இரசிக்க
ஆயுள் போதாது. தமிழ்க் கவிதைத் தொடாத இவ்வுலக
அனுபவங்கள் ஏதுமில்லை! இம்மை முதல் மறுமை
வரை இட்டுச் செல்லும் கவிதை போதையில் மயங்க:


வாழாப் பத்து - முத்தி உபாயம்

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
  பற்றுநான் மற்றுஇலேன்  கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே
  திருப்பெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
  ஆண்ட நீ அருள் இலையானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன்  கண்டாய்
  வருக என்று அருள்புரியாயே!

                                                    மாணிக்க வாசகர்


நானுண்டு நான்கற்ற தமிழுண்டு; போதும்
நல்லோர்கள் வல்லோர்கள் நற்றமிழை யாத்தோர்
தேனுண்டு நான்வாழ்வேன்; சீர்சிறப்பு வேண்டேன்!

                                                    வாணிதாசன்


இற்றது நெஞ்சம்; எழுந்தது இருங் காதல்;
அற்றது மானம்; அழிந்தது நாண் - மற்று இனி உன்
வாய் உடையது என்னுடைய வாழ்வு! என்றான்  வெங்காமத்
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து!

                                                    புகழேந்திப் புலவர்


கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா!
கருணை தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா!
எந்த மனதில் பாசமுண்டோ
அந்த மனமே அம்மா!

                                                    கண்ணதாசன்


மெல்லென அதிர்ந்த மின்னல் அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! ......
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த  மதலையின் சிரிப்பு!
குளிர் வாழைப் பூக்கொப்பூழ் போன்ற
ஒளி இமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
செம்பவழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது-பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!

                                                   பாரதிதாசன்


நல்லெண்ணையும் சோறும் 40 நாள் சாப்பிட்டேன்.
     அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
முட்டையும் சோறும் 30 நாள் சாப்பிட்டேன்
      அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
பச்சரிசிச் சோறு 10 நாள் சாப்பிட்டேன்
     அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
சிரட்டையிலே தண்ணிவச்சு சிலநாளு
                                  பாய்ஞ்சு பார்த்தேன்
     அப்படியும் போகலே அரும்பாவி உசிரு
பஞ்சு மெத்தை தான் விரிச்சு 10  நாள் முட்டினேன்
     அப்படியும்  போகலே அரும்பாவி உசிரு
முகட்டிலே கயிறு போட்டு முற்றத்திலே
                                   நின்று பார்த்தேன்
அப்படியும் போகலே அரும்பாவி உசிரு!

                                     வேடிக்கையான நாட்டுப்பாடல்
(சொன்னவர் அமரர் திரு டி.என்.சுகி சுப்பிரமணியன்)


வெட்டியதால் சாகவில்லை, வெட்டாவிட்டால்
                                                                            செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன்.
வந்ததால் வரவில்லை, வராவிட்டால் வந்திருப்பேன்!

                                                                           விடுகதை
(சொன்னவர் புலவர் இரே. சண்முகவடிவேல்)

பொருள்: காதலனைக் காண மழை இரவில் புறப்பட்ட
காதலி, மின்னல் வெட்டிய ஒளியில் தரையோடு தரை-
யாக இருந்த கிணற்றில் விழாது தப்பினாளாம். அதே
ஒளியில்  செத்த பாம்பின் மேல் கால் வைத்ததையும்
கண்டாளாம். அந்த ஒளியே தன் தந்தை வருவதையும் 
காட்ட, அதனால் அவள் வரவில்லையாம்! 

தொகுப்பு: திருமதி சிமோன்