பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 juin 2011

இணையமெனும் இனியவலை



இணைய உரையாடல் - மின் உரையாடல் (சாட்)

மின் இதழ்கள் , மின்னஞ்சல்  போன்ற இணைய  செயல்பாடுகள் பற்றி இதுவரை பார்த்தோம். இணைய உரையாடல் பற்றித்  தெரிந்துக்கொள்வோம் . இணைய இணைப்பின் வழியாக எழுத்து, பேச்சு மூலமாக உரையாட முடியும். மின்னஞ்சல் போன்று அல்லாமல் உடனடியாக எதிர் முனையில் இருப்பவரின்  மறுமொழியைப் பார்த்தே உரையாட ஏதுவாக  இருப்பதால் அனைவரும் இதை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

இரு நாட்டு அரசர்களுக்கிடையே தூது செல்லத் தூதுவர்கள் இருப்பது போலவே இங்கு இருவரிடம் உரையாடலை நிகழ்த்த  மென்பொருள் உதவுகிறது.  இந்த மென்பொருளைத்    தூதுவர்  என்றே அழைக்கிறார்கள். எம்.எஸ்.எம் மெசெஞ்சர்   , ஸ்கைப் , யாஹூ மெசெஞ்சர் குறிபிடத்தக்கவை.
மேலே குறிப்பிட்ட ஏதாவது  ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி  ஒருவர் அல்லது பலருடன்  உரையாடலாம்.  உரையாடல் பெரும்பாலும் செய்திகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் நடைபெறுகிறது . துரிதமாகத் தட்டச்சு செய்வது அவசியம். இணைய சுருக்கச் சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்ச்சிச் சின்னங்களை (சிம்பல்) பயன்படுத்துவது வரவேற்கத் தக்கது.

உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் ஒருங்குறி  முறையைப் பயன்படுத்துவதால் உலகின் எப்பகுதியில்   இருந்தாலும் இலவசமாக உரையாடக் கூடும். பொழுது போக்குக்காகவும் பல்வேறு செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் உருவாக்கப்பட்டது. இந்த எண்ணப்பரிமாற்றங்களைத்      தங்கள் சொந்தப் பெயரிலோ புனை பெயரிலோ நடத்தலாம்.

பலருடன் உரையாடுவதால் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.புதிய நண்பர் வட்டம் உருவாகும். ஒரே வயதினராக இருந்தால் பள்ளிப் பாடங்களைப்பற்றி விவாதிக்க, புரியாதவற்றைத் தெளிவு  செய்துகொள்ள முடியும். பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் நாடு, பண்பாடு, உணவு போன்ற செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.  அரட்டையில் மூழ்கி இளைஞர்கள் பல மணி நேரத்தை விரயம் செய்யும் ஆபத்தும் உண்டு. புகைத்தல், மது அருந்துதல், போதை பொருட்களுக்கு அடிமையாதல் போல இணையமும்  அடிமைப்படுத்தும் சாதனமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இணைய அரட்டை மூலம் தூரத்தில் இருப்பவர்களைச் சந்தித்து மகிழ்பவர்கள் அருகில் இருக்கும் நண்பர்களைச் சந்திப்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்ற குறைபாடும் உண்டு.  

இணையம் வழி உரையாடல் செய்யும்போது மறு முனையில் இருப்பவர் எப்படிப்பட்டவர், ஆணா பெண்ணா  வயதானவரா போன்ற தகவல்கள் எதுவும் தெரியாது.இணையத்தில் சாட்டிங் மூலம் அறிமுகமாகி நண்பர்களாகிக் காதலர்கள்  ஆனவர்களும் தம்பதியானவர்களும் உண்டு. இதில் சிக்கிவிட்டு விடுபட முடியாமல் பணம்,பெயர்,நிம்மதியை இழந்து, பெரும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே .

சில எச்சரிக்கை வழிகளைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். இணையத்தில் உரையாடும் போது  மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் ; பிறர் மனம் புண் படாதவாறு நடந்துகொள்ளுங்கள். வீணான பேச்சுக்கள்,    தேவையில்லாத விடயங்கள், விவாதங்களைத் தவிர்க்கவும். எந்த நிலையிலும் சொந்த (பர்சனல்)  தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள் . உங்கள்  படத்தை ஒருபோதும் அனுப்பாதீர்கள் .உங்களை நேரில் சந்திக்க விரும்பினால் தவிர்த்துவிடுங்கள். உங்கள் படிப்பு, வேலை சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உதவியாகவும் நம்பகமானவர்களகவும்  இருப்பார்கள் என்றால் பலர் கூடும் இடங்களில் அல்லது உங்களின் உற்ற நண்பர்கள் மத்தியில் சந்திப்பை வைத்துக் கொள்ளுங்கள். இன்று நடக்கும் பாலியல் மோசடிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு  செயல்படவும். இதில் மிகவும்  எச்சரிக்கை அவசியம்.
அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர் பாலினத்தாருடன்    சாட் பண்ணுவதை தவிர்ப்பது நல்லது.    காலம் தாழ்த்தி இரவு நேரங்களில் உரையாடல் வேண்டாம். தற்பொழுது ஆண்களைவிடப் பெண்கள் இந்த உரையாடலில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வு  ஒன்று தெரிவிக்கிறது.சாட் பண்ணுவது நேர் முகமாக அல்லாமல் மறைமுகமாக  ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது போன்றதே. ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.     
நேரிடையாக பாலியல் தவறுகளில் ஈடுபடாமல் இணையத்தில் உரையாடல்களிலும் சிற்றின்பப் பேச்சுகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.அவற்றிக்கு அடிமையகிவிடுகின்றனர்.      விடலைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் - பாலியல் ஈர்ப்பு பற்றிக்கொள்ளும் இந்த வயதினர் எதிர் தரப்பில் உரையாடும் நபர் குறித்து மனத்துக்குள் கற்பனையில் ஓர் உருவத்தை வரைந்து பாலியல் உரையாடல்களில் இலயித்துப் பொழுதையும் உடல்  நலத்தையும்  கெடுத்துக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் இது குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். குடும்ப உரையாடல்களை அதிகப் படுத்தவேண்டும்.செய்திகளை, தங்கள் அனுபவங்களை, நேரத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். நல்ல நண்பர்களை வீட்டுக்கு அழைத்து உரையாடல்களை ஊக்குவிக்கலாம் . தேவையற்ற இணைய தளங்களை தடுக்கக்கூடிய மென் பொருட்களைக் கணினியில் பொருத்தலாம்.

இணையம் தரும் போலியான தைரியத்தால் தாழ்வு மனப்பான்மை உடைய சில ஆண்களும் பெண்களும் முகம் தெரியாத பலருடன் உரையாடித் தங்களை ஹிரோவாக நினைத்துக்  கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் சராசரி வாழ்கைக்குத் திரும்ப விரும்புவதே கிடையாது. கற்பனை உலகிலேயே சஞ்சரித்துத் தங்கள் வாழ்க்கையையும் பிறருடைய வாழ்க்கையையும் கெடுத்து விடுகிறார்கள்.
திருமணமான சிலரும் இத்தகைய உரையாடலில் ஈடுபடுகிறார்கள் .இணையத்தில் ஒரு துணையை வைத்துக்கொண்டு உரையாடல்களைத் தொடர்பவர்கள் மனத்தளவில் வாழ்க்கைத்  துணைக்குத்   துரோகம் இழைப்பவர்களே. இதை மறைக்கப் பொய் பேசுவது . . . எனக் குடும்ப வாழ்க்கையின் மதிப்பீடுகள் சிதைவடைகின்றன. உரையாடல்களைச் சேமித்து வைக்கும் வசதியும் உண்டு. பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தேவையானதை மட்டும் சேமிப்பது நல்லது.
 என்ன உரையாட நண்பர்களைத் தேடுகிறீர்களா ?!

அடுத்த முறை சந்திக்கும்  வரை

திருமதி லூசியா லெபோ.